துரைமுருகன் துடுக்கு பேச்சு – காங்கிரசார் கடும் கொந்தளிப்பு - South Indian Crime Point
Friday, October 17, 2025
- Investigation Weekly Tamil Magazine

துரைமுருகன் துடுக்கு பேச்சு – காங்கிரசார் கடும் கொந்தளிப்பு

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 02, 2025, 04.30 AM சித்திரை 19, விசுவாவசு வருடம்

சென்னை,

சட்டசபையில் ‘நீட்’ சட்டம் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பான விவாதத்தில், ‘தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டுப் பேசியது, கூட்டணி தர்மத்தை மீறும் செயல்’ என, சமூக வலைதளங்களில் தமிழக காங்கிரசார் விமர்சித்துள்ளனர்.

சட்டசபையில், கடந்த 28ம் தேதி காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, ‘நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது என, தொடர்ந்து பேசுகின்றனர். ‘நீட்’ தேர்வை காங்கிரஸ் அரசு சட்டமாக்கியது என்பதை நிரூபித்தால், நான் பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என சவால் விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ‘முதலில் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்’ என்றார். அவரது பேச்சு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கூட்டணி பண்பை மீறி, துரைமுருகன் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடிய, நாகரிகமற்ற பதிலாக, தமிழக காங்கிரசார் கருதுகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டில், மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஆட்சியில்தான், முதன் முதலில் ‘நீட்’ யோசனை கொண்டு வரப்பட்டது. தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தன. காரணம், மாநில இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் போன்றவை பாதிக்கப்படும் என்ற அச்சம். ஆனால், கடந்த 2016ம் ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்தான், பார்லிமென்டில் சட்டத் திருத்தம் செய்து, ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

தமிழகத்தில், கடந்த 2017ம் ஆண்டில், ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசு, நீட் விலக்கு கோரி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு மறுத்தது. அதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோளாகக் காட்டியது. தி.மு.க, தன் தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என, அறிவித்தது. ஆனால், இதுவரை அதை செயல்படுத்த முடியவில்லை.

‘உண்மை நிலவரம் இப்படியிருக்கும்போது, சட்டசபையில், செல்வப்பெருந்தகையின் சவாலுக்கு பதில் சொல்ல முடியாமல், துரைமுருகன் துடுக்குத்தனமாக பேசி உள்ளார்’ என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ‘இப்படிப்பட்ட அவமானங்களுடன் தி.மு.க., கூட்டணியில் இருக்க வேண்டாம். தி.மு.க., என்றுமே விஷ ஜந்துதான். பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தால், அது எந்த நேரத்திலும் விஷம் கக்கித்தான் கொல்லும். அளவுக்கு அதிகமாக தி.மு.க.,வுக்கு ஜால்ரா போட்டதால் வந்த வினை’ என்றெல்லாம் விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest