

பதிவு: புதன்கிழமை, மே, 14, 2025, 06.00 AM சித்திரை 31, விசுவாவசு வருடம்
கோவை,
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், காமக்கொடூரர்கள் ஒன்பது பேருக்கும், சாகும்வரை ஆயுள் சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் சபரிராஜன், 34; இன்ஜினியரிங் பட்டதாரியான இவருக்கும், பொள்ளாச்சியைச் சேர்ந்த, 19 வயது கல்லுாரி மாணவி ஒருவருக்கும், ‘பேஸ்புக்’ வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.
‘அவுட்டிங்’ செல்ல சபரிராஜன் அழைத்துள்ளார். கடந்த 2019 பிப்ரவரி 12ல் சபரிராஜன் கூறிய இடத்துக்கு மாணவி சென்றார். அங்கு வந்த ஒரு காரில், மாணவியை கட்டாயப்படுத்தி சபரிராஜன் ஏற்றினார்.
ஆனைமலை செல்லும் வழியில் காரை நிறுத்தி, சபரி ராஜனின் நண்பர்களான பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 35; சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த சதீஷ், 34; வசந்தகுமார், 31, ஆகியோரும் காரில் ஏறியுள்ளனர்.
அச்சமடைந்த மாணவி, காரிலிருந்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, நான்கு பேரும் சேர்ந்து மாணவியை மிரட்டி, காரில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தனர். ஆடையை வலுக்கட்டாயமாக அகற்றி வீடியோ எடுத்தனர்.
அவரது தங்கச்செயினை பறித்தனர். பின், சின்னப்பம்பாளையத்திலுள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு கடத்திச்சென்று, நான்கு பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால், ஆபாச வீடியோவை சமூக ஊடகத்தில் பரப்பி விடுவோம் என்றும், தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்றும் மிரட்டி, காரிலிருந்து இறக்கி விட்டனர்.
பல பெண்கள் பாதிப்பு
இதனால், அந்த மாணவி, நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், வேறு வழியின்றி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அண்ணனிடம் கூறினார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் சகோதரர், சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரை சந்தித்து கேட்டபோது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மாணவியின் ஆபாச வீடியோவை அழிக்க, திருநாவுக்கரசின் மொபைல் போனை பறித்து சோதனையிட்ட போது, அதில், பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை பார்த்து, அவர் அதிர்ந்து போனார்.
பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசில், 2019 பிப்., 24ல் மாணவியின் சகோதரர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை அடுத்த நாளே கைது செய்தனர். தலைமறைவான திருநாவுக்கரசு, மார்ச் 5ல் கைது செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
இவர்கள் கைதான பின், பாதிக்கப்பட்ட பெண்களை கொடுமைப்படுத்திய வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் அமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், பொள்ளாச்சி ஆச்சிபட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், 33, என்பவர், வழக்கை வாபஸ் பெறுமாறு, மாணவியின் சகோதரரை மிரட்டியுள்ளார். புகாரில், மணிவண்ணனை போலீசார் தேடிவந்த நிலையில், கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் அவர் சரணடைந்தார்.
அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது, திருநாவுக்கரசுடன் சேர்ந்து இவரும், பல பெண்களை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஐந்தாவது நபராக மணிவண்ணன் கைது செய்யப்பட்டார். பண்ணை வீடு உட்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, ஏழு சொகுசு கார்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், இவ்வழக்கு 2019 ஏப்., 25ல் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, தனியாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த பண்ணை வீடு மற்றும் ஐந்து பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். மாணவி தவிர, பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.
விசாரிக்க ரகசிய குழு
இதனால், ரகசிய குழு அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டனர். அவர்களில், மேலும் ஏழு பெண்கள் துணிச்சலாக புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் வீடியோ ஆதாரம் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த பாபு, 33; ஆச்சிபட்டி ஜீவா நகரைச் சேர்ந்த ஹெரன்பால், 34; வடுகபாளையம் பசும்பொன்நகரைச் சேர்ந்த அ.தி.மு.க., மாணவரணியில் பொறுப்பு வகித்த அருளானந்தம், 40; பனிக்கம்பட்டி, கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார், 33, ஆகிய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒன்பது பேரையும் சி.பி.ஐ., ‘கஸ்டடி’ எடுத்து விசாரித்த போது, 2016 – 2019 வரையில், 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று, கூட்டு பலாத்காரம் செய்ததும், வீடியோ எடுத்து அதை காட்டியே, பலமுறை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததும் அம்பலமானது.
குற்றப்பத்திரிகை
ஒன்பது பேர் மீதும், 15க்கும் மேற்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கோவை மகளிர் கோர்ட்டில், 2021 செப்., 16ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2021 அக்., 20ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் வழக்கு விசாரிக்கப்படாமல் முடங்கியது.
வழக்கை விரைந்து விசாரிக்க, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. ஆறு மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, 2023 பிப்., 24ல் சாட்சி விசாரணை துவங்கியது.
இதற்காக, ‘இன்கேமரா’ முறையில் விசாரணை நடத்த, கோர்ட் வளாகத்தில் தனிஅறை ஏற்படுத்தப்பட்டது. நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில், சாட்சி விசாரணை நடந்தது. கடந்த மாதம் 28ம் தேதி, விசாரணை முழுதுமாக முடிந்ததை தொடர்ந்து, மே 13ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
குற்றவாளிகள்
இதையடுத்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது பேரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை 10:30 மணிக்கு அழைத்து வரப்பட்டு, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஒன்பது பேரும் குற்றவாளிகள் என, நீதிபதி நந்தினிதேவி அறிவித்தார்.
அப்போது, குற்றவாளிகள் நீதிபதியிடம், ‘தங்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதாலும், வயதான பெற்றோர் இருப்பதாகவும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என, தனித்தனியாக கோரிக்கை விடுத்தனர்.
சி.பி.ஐ., தரப்பு வக்கீல் சுரேந்திரமோகன் வாதிடுகையில், “குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, பகல் 12:30 மணிக்கு, நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும், சாகும் வரை ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஏழு பேருக்கு, மொத்தம் 85 லட்சம் ரூபாய், அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை விபரம்
முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், ரூ.40 ஆயிரம் அபராதம், 2வது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ரூ.35 ஆயிரம் அபராதம், 3வது குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள், ரூ.78 ஆயிரத்து 500 அபராதம், 4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள், ரூ.13 ஆயிரத்து 500 அபராதம், 5வது குற்றவாளி மணி எனும் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ரூ.18 ஆயிரம் அபராதம், 6வது குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ.10,500 அபராதம், 7வது குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், ரூ.14 ஆயிரம் அபராதம், 8வது குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ.8,500 அபராதம், 9வது குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ. 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.