

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 20, 2025, 10.10 PM வைகாசி 06, விசுவாவசு வருடம்
ராணிப்பேட்டை,
கல்லுாரி மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்து, துன்புறுத்திய தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், 40. இவருக்கு திருமணமாகி கனிமொழி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜன., 31ல், அரக்கோணம் அடுத்த பருத்திப்புதுாரைச் சேர்ந்த பலராமன் மகளான கல்லுாரி மாணவி பிரித்தி, 21, என்பவரை, காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு மாதமாக தெய்வசெயல், பிரித்தியை அடித்து கொடுமைப் படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, அரக்கோணம் டவுன் போலீஸ் மற்றும் அரக்கோணம் தாலுகா போலீசில் பிரித்தி புகார் மனு அளித்துள்ளார். நடவடிக்கை இல்லாததால், டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து, அரக்கோணம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ரவியை சந்தித்து, தி.மு.க., பிரமுகர் தெய்வசெயலின் செயல்பாடு குறித்து கூறி, இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். இதைத்தான், அ.தி.மு.க., தற்போது போராட்டம் வரை கொண்டு சென்றிருக்கிறது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
பிரித்தி புகார் மனு தீவிரமாக விசாரிக்கப்பட்டது. முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல், இரண்டாவதாக தி.மு.க., பிரமுகர் தெய்வசெயலை பிரித்தி திருமணம் செய்து கொண்டார். தெய்வசெயலும் ஏற்கனவே திருமணமாகி கனிமொழி என்ற மனைவி உள்ளார்.
பிரித்தியுடன் குடும்பம் நடத்திய தெய்வசெயல், முதல் மனைவி கனிமொழியோடும் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், பிரித்தியோடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
பிரித்தி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து, கடந்த 9ம் தேதியே வழக்கு பதிந்து விட்டோம். இன்னொரு புகாரையும் கொடுத்து, அதன் மீதும் வழக்குப்பதிவு செய்ய பிரித்தி அழுத்தம் கொடுத்தார். அதை ஏற்கவில்லை என்றதும், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ரவியை சந்தித்து, தனக்கு ஆதரவாக செயல்பட கேட்டுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின், இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் அ.தி.மு.க., தரப்பு, போலீஸ் மீது குற்றஞ்சாட்டுகிறது.
ஏற்கனவே பதியப்பட்ட வழக்கின் கீழ் தெய்வசெயலை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.