

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 03, 2025, 02.50 AM வைகாசி 20, விசுவாவசு வருடம்
சென்னை,
தண்டனை அறிவிக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரனை சிறைக்கு அழைத்து சென்ற போலீஸார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 டிசம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம்தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டூர்புரத்தை சேர்ந்த டி.ஞானசேகரன் (37) என்பவரை போலீஸார் மறுநாள் 25-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, ஐமால் ஜமான், பிருந்தா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரியில் ஞானசேகரனுக்கு எதிராக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பின்னர், இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு கடந்த மார்ச் 7-ம் தேதி மாற்றப்பட்டது. மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) எம்.ராஜலட்சுமி முன்பு வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தியும், கைதான ஞானசேகரன் தரப்பில் சட்ட பணிகள் ஆணை குழு தரப்பு வழக்கறிஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 29 அரசு தரப்பு சாட்சிகள், 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பிலும் வாதங்கள் கடந்த மே 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
குற்றவாளி என அறிவிப்பு
ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என அறிவித்து நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28-ம் தேதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி, புழல் சிறையில் இருந்த ஞானசேகரனை போலீஸார் நேற்று மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.
207 பக்க விரிவான தீர்ப்பு: 207 பக்க விரிவான தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளதாவது: குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது. மொத்த அபராத தொகை ரூ.90 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும். தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
விஞ்ஞானப்பூர்வமாக நிரூபணம்
தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி கூறியதாவது: இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வந்தால் மட்டுமே குற்றம்சாட்டப்படும் நபர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர முடியும். இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பது புலன் விசாரணையில் அவரது செல்போன் எண்ணை கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்களும் அதை சட்டப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். ஒருவேளை இந்த வழக்கில் வேறு யாரும் பின்னணியில் இருப்பதாக நீதிமன்றம் கருதினால், நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அவரையும் இந்த வழக்கில் இணைக்க முடியும். ஆனால், அதுபோல வேறு யாரும் பின்னணியில் இல்லை என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி இந்த வழக்கை தொடர்புபடுத்தி ஊகங்களை எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
தண்டனை முழு விவரம்
பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின்படி ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகள் மற்றும் அதற்கான தண்டனை விவரம்:
- விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் (பிரிவு 329): 3 மாத சிறை.
- தடுத்து நிறுத்துதல் (126-2): ஒரு மாத சிறை.
- வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல் (87): 10 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
- காயம் ஏற்படுத்துதல் (127-2): ஓராண்டு சிறை.
- விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் (75-2): 3 ஆண்டு கடுங்காவல் சிறை.
- கடுமையாக தாக்குதல் (76): 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
- மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல் (64-1): ஆயுள் தண்டனை. இதில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு செய்ய கூடாது. ரூ.25 ஆயிரம் அபராதம்.
- கொலை மிரட்டல் விடுத்தல் (351-3): 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
- வன்கொடுமை ஆதாரங்களை அழித்தல் (238-பி): 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
- தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறி வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் (தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-இ): 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்.
- தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4. பாலியல் குற்றச்சாட்டுக்கான பிரிவில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், இப்பிரிவில் தண்டனை விதிக்கப்படவில்லை.
ஒருவர் மட்டுமே குற்றவாளி
நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கு இல்லாமல் ஞானசேகரன் மீது கடந்த 2010 முதல் இதுவரை 37 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்டவருக்கு கருணை காட்ட முடியாது. எனவே, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றவும், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசைதிருப்பவும், மிரட்டவும் ‘சார்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார் என்பது அறிவியல்பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது. எனவே, அவர் ஒருவர் மட்டும்தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் முழு மனதுடன் ஏற்கிறது.
பெண்ணின் அடையாளங்களை கசியவிட்டதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. தற்போது அபராத தொகை ரூ.90 ஆயிரத்தை அவருக்கு வழங்க இந்த நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் இழப்பீடு குறித்து சட்ட பணிகள் ஆணை குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்துள்ளது தமிழக காவல் துறை. விசாரணையின்போது, உயர் நீதிமன்றமே பாராட்டும் வகையில், நியாயமாகவும், விரைவாகவும் ஐந்தே மாதத்தில் வழக்கை நடத்திமுடித்து, கடும் தண்டனை பெற்று தந்துள்ளோம். இதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டதாக மகளிர் நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.
இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியில்கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்திகொண்ட சிலரது எண்ணம் தவிடுபொடி ஆகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என சமீபத்தில் நாம் கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு ஏற்ப, இந்த வழக்கில் எந்தசலுகையுமின்றி கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.