

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 09, 2025, 04.00 AM வைகாசி 26, விசுவாவசு வருடம்
மதுரை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்காக அமித்ஷா நேற்று இரவில் மதுரை வந்தார். விமான நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் தங்கும் விடுதிக்கு திரும்பிய அவர் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 22 மாநில நிர்வாகிகள் அடங்கிய தமிழக பாஜக மையக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தாதது ஏன்? கட்சி நிர்வாகிகளிடம் சுணக்கம் காணப்படுவது ஏன்? என்பது குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா விவாதித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், கடந்த பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற பாஜக, தென் மாவட்டங்களில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2ம் இடம் வந்தது குறிப்பிடத்தக்கது. இதை நிர்வாகிகளிடம் குறிப்பிட்ட அமித்ஷா, இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தவும், அதிமுக கூட்டணியில் வரும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் தயார் செய்யவேண்டும், கூட்டணி கட்சிகளையோ அதன் தலைவர்களையோ எந்தவிதத்திலும் பாஜகவினர் விமர்சித்துப் பேசக்கூடாது. பல கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 2026 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் அறிவுறுத்தியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், மதுரையில் ஜூன் 22-ல் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜகவினர் திரளாக பங்கேற்கவும் அமித்ஷா கேட்டுக் கொண்டார். முன்னதாக இந்து முன்னணி நிர்வாகிகள் அமித்ஷாவை நேரில் சந்தித்து முருக பக்தர்கள் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கினர்.
2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: மதுரை கூட்டத்தில் அமித்ஷா உறுதி
மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முருகன் சிலையை வழங்கிய கட்சியினர்.
ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போல 2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப்பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது: தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 3 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமையுடைய மதுரை மண்ணின் நாயகரான முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன். வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டைச் சிறப்பாக நடத்தித்தர வேண்டுகிறேன்.
மதுரை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. மதுரை மண் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நீண்டகால அரசியல்அனுபவம் மூலம் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், தமிழக மக்கள் திமுகவை தூக்கி எறியக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பகல்ஹாமில் அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொடூரமாக கொலை செய்தவர்களை, முப்படைகளைத் திரட்டி பிரதமர் மோடி அவர்களது ஊருக்குள் புகுந்து அடித்தார். இந்தியாவில் தீவிரவாதிகள் பலமுறை கைவரிசை காட்டியிருக்கிறார்கள். ஆனால், மோடி போன்று வீரதீரச் செயல்களை இதற்கு முன்னர் இருந்த பிரதமர்கள் செய்யவில்லை. மோடி ஆட்சியின் வான்வெளி சாதனைகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன் தாக்குதலை இந்தியா வான்வெளியில் தடுத்து நிறுத்தி, தாக்கி அழித்தன. இதன் மூலம் வான்வெளி வல்லமை உலக நாடுகளுக்கு நிரூபணமாக்கப்பட்டது.
2026 தேர்தலில் பாஜக தொண்டர்களின் பணி மிகவும் முக்கியமானது. 2024-ல் ஒடிசாவில் பாஜக முழு பலத்தோடு ஆட்சி அமைத்தது. ஹரியானாவைவிலும் பாஜக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 2025-ல் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அகற்றப்பட்டு, 27 ஆண்டுக்குப்பின் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. டெல்லியில் பாஜக அமைந்ததுபோல், 2026-ல் தமிழகம், மேற்குவங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரப்போகிறது.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை, திமுக அரசு மடைமாற்றி, மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மூலம் ரூ.39 ஆயிரம் கோடி அளவுக்கு திமுக அரசு ஊழல் செய்துள்ளது. இங்கு சட்டவிரோத ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசாகும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றியதாகக் கூறுகிறார்கள். தைரியமிருந்தால் வாக்குறுதிப் பட்டியலை எடுத்துவந்து, நிறைவேற்றிய திட்டங்களைக் காட்டுங்கள்.
தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தென் தமிழகத்தில் சாதிப் பிரச்சினை, பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, திமுக மக்களைப் பிளவுபடுத்துகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அக்கறையோ, கவலையோ இல்லை.
திருப்பரங்குன்றத்தில் பழமையான முருகனின் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லும் துணிச்சல் திமுக அரசுக்கு வந்துள்ளது. அரசியல் லாபம் கருதி பிரிவினையைத் தூண்டி திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாட்டில் நமது ஒற்றுமையையும், வலிமையையும் காட்ட வேண்டும். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், தமிழக முதல்வரிடம் மருத்துவம், பொறியியல் உயர்கல்வியை தமிழில் கொண்டு வாருங்கள் என வலியுறுத்தி வருகிறேன்.
தமிழகத்தின் மரபுச் சின்னமான செங்கோலை நாட்டின் உயர்ந்து இடத்துக்குக் கொண்டு சென்ற பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினாரா?
பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் 4.91 ட்ரில்லியன் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியது 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் மத்திய பாஜக அரசு 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.63 ஆயிரம் கோடியும், ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடியும், விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.3,500 கோடியும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
உங்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் திமுக ஆட்சியை எப்படி அகற்றப் போகிறோம், எப்போது அகற்றப்போகிறோம் என்பதாகவே இருக்க வேண்டும். 2026 தேர்தலில் திமுகவை ஆட்சிலிருந்து அகற்றத் தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் எனக்கு இப்போதே பதில் சொல்ல வேண்டும். அதற்காக எல்லோரும் இரு கைகளையும் தூக்கி, அதிமுக- பாஜக கூட்டணி வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பணிகளை தொடங்குங்கள்: முன்னதாக, மதுரை தனியார் ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று காலை பாஜக மையக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், “திமுக ஆட்சியை அகற்றும் வகையில் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரங்களையும், பணிகளையும் தொடங்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து இணக்கமாகச் செயல்பட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சிகளில் தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.