

பதிவு: வியாழக்கிழமை, ஜூன் 12, 2025, 12.40 AM வைகாசி 29, விசுவாவசு வருடம்
மேகாலயா,
இறந்துவிட்டதாக எண்ணிய நிலையில், சோனமின் குரலைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பம் உடனடியாக ம.பி காவல்துறைக்குச் சொல்ல, உ.பி காவல்துறைக்குத் தகவல் பறந்திருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியும், அவரின் மனைவி சோனமும் ஹனிமூனுக்காக மேகாலயாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற இருவரும் மாயமாகிவிட, ம.பி காவல்துறையை ரகுவன்ஷியின் குடும்பம் அணுக, மேகாலயா காவல்துறையினரை நாடியிருக்கிறது ம.பி காவல்துறை.
10 நாள்களுக்கு மேலாக இருவரையும் கண்டுபிடிக்க முடியாமல் இரு மாநில காவல்துறையும் திணற, வடமாநிலங்களில் பெரும் பேசுபொருளானது இந்த வழக்கு.
ஜூன் 2-ம் தேதி, டூரிஸ்ட் கைடு ஒருவர் துப்புக்கொடுக்க, மேகாலயாவின் ஆழமான பள்ளத்தாக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது ரகுவன்ஷியின் உடல். சோனத்தின் உடலையும் ஐந்தாறு நாள்களாகத் தேடித் திரிந்தது காவல்துறை.
இந்த நிலையில், ஜூன் 9-ம் தேதி அதிகாலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு சாலையோரக் கடைக்கு அழுதுகொண்டே வந்த சோனம், `மேகாலயாவுக்கு ஹனிமூனுக்குச் சென்ற எங்களிடம் ஒரு கும்பல் நகையைப் பறிக்க முயன்றது. என்னைக் காப்பாற்றும் முயற்சியில் கணவரின் உயிர் பிரிந்துவிட்டது’ எனக் கடையின் உரிமையாளரிடம் கதறியிருக்கிறார்.
அந்தக் கடைக்காரரிடம் செல்போனை வாங்கி, குடும்பத்தினரிடமும் இதே கதையைச் சொல்லியிருக்கிறார்.
இந்த கொலை வழக்கு குறித்து மேகாலயா போலீஸார் கூறியதாவது: சோனத்தின் தந்தை தேவி சிங், இந்தூரில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் மகன் விபின், மகள் சோனம் கடையை கவனித்து வந்தனர்.
இந்த கடையில் ராஜ் குஷ்வாகா கணக்காளராக பணியாற்றி வந்தார். அப்போது சோனத்துக்கும் ராஜ் குஷ்வாகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர்.
வேறு சாதி, ஏழை குடும்பத்தை சேர்ந்த ராஜ் குஷ்வாகாவை தனது குடும்பத்தினர் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது சோனத்துக்கு நன்றாக தெரியும். எனவே குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
கடந்த மே 11-ம் தேதி ராஜா ரகுவன்சி, சோனம் திருமணம் நடைபெற்றது. கணவரை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல சோனம் சதித் திட்டம் தீட்டினார். இதற்காக தேனிலவுக்கு செல்ல அவர் வலியுறுத்தினார்.
புதுமண தம்பதியை காஷ்மீருக்கு அனுப்ப குடும்பத்தினர் திட்டமிட்டனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக காஷ்மீர் திட்டம் கைவிடப்பட்டது. அண்டை நாடான இலங்கைக்கு செல்ல ராஜா ரகுவன்சி விரும்பினார். ஆனால் சோனம், மேகாலயாவுக்கு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். புது மனைவியின் விருப்பத்துக்கு மதிப்பளித்து மேகாலயாவில் தேனிலவை கொண்டாட ராஜா ஒப்புக் கொண்டார்.
இதனிடையே சோனமும் அவரது காதலர் ராஜ் குஷ்வாகாவும் செல்போனில் ரகசியமாக பேசி, ராஜா ரகுவன்சியை கொலை செய்ய விரிவான சதித் திட்டத்தை தீட்டினர். இதன்படி தனது நண்பர்கள் ஆகாஷ், விஷால் ஆகியவை இந்தூருக்கு ராஜ் குஷ்வாகா வரவழைத்தார். அவர்களை சோனத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ராஜா ரகுவன்சியும் சோனமும் தேனிலவுக்காக புறப்பட்டபோது ஆகாஷும் , விஷாலும் புதுமணத் தம்பதியை பின்தொடர்ந்தனர். அவர்களோடு ஆனந்த் என்பவரும் இணைந்து கொண்டார். யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டார்.
கடந்த மே 23-ம் தேதி ராஜா ரகுவன்சியும் சோனமும் மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவிக்கு சென்றனர். அவர்களை ஆகாஷ், விஷால், ஆனந்த் பின்தொடர்ந்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ராஜா ரகுவன்சியுடன் 3 பேரும் அறிமுகமாகினர்.
புதுமண தம்பதியுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றார். தனிமையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று கூறி அந்த சுற்றுலா வழிகாட்டியை சோனம் திருப்பி அனுப்பிவிட்டார். பின்னர் செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி சிசிடிவி கேமராக்கள் இல்லாத மலை உச்சிக்கு கணவர் ராஜா ரகுவன்சியை, சோனம் தனியாக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ராஜா ரகுவன்சியை கோடரியால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது ஆகாஷ் உள்ளிட்ட 3 பேருடன் சோனமும் இணைந்து ராஜா ரகுவன்சியை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளனர்.
பின்னர் 4 பேரும் இரு மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கி.மீ. தொலைவு பயணம் செய்துள்ளனர். இதன்பிறகு ரயில், பேருந்துகள் மூலம் அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா உத்தர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அந்த மாநிலத்தில் காதலரின் நண்பர்கள் வீடுகளில் சோனம் பாதுகாப்பாக தங்கி உள்ளார். ஆனால் ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் வேறு வழியின்றி சோனமும் தானாக முன்வந்து சரண் அடைந்துள்ளார்.
ராஜா ரகுவன்சியை கொலை செய்ய ரூ.20 லட்சம் வழங்குவதாக சோனம் வாக்குறுதி அளித்திருக்கிறார். சில லட்சங்களை அவர் முன்பணமாக வழங்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் ரூ.9 லட்சம் ரொக்கமும் ஏராளமான தங்க நகைகளும் இருந்தன. இவ்வாறு மேகாலயா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள்
தேனிலவுக்கு வந்த புதுமண தம்பதி காணாமல் போனதால் மேகாலயாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பலரும் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது.
ஆபரேஷன் ஹனிமூன் என்ற பெயரில் மேகாலயா காவல் துறை விசாரணையை தொடங்கியது. 120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 20 பேர் மூத்த அதிகாரிகள் ஆவர். இவர்கள் மேகாலயா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
சோனத்தின் செல்போன் அழைப்புகள், சமூக வலைதள பதிவுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் புலன் விசாரணை மூலம் உண்மை வெளிசத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.