“நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்..” – மேடை அதிர பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 28, 2025, 01.45 AM சித்திரை 15, விசுவாவசு வருடம்

கோயம்புத்தூர்,

சிறுவாணி தண்ணீரை போல சுத்தமான வெளிப்படையான ஆட்சி அமைப்போம் என்று விஜய் கூறினார்.

த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கோவையில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன் தினம் கோவை சென்றார். நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், கோவை-அவினாசி ரோடு லீமெரிடியன் ஓட்டலில் தங்கி இருந்தார்.

இதனிடையே தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி விஜய் வரக்கூடிய சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வழிநெடுகிலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெறும் பகுதியில் தடுப்புகளை தகர்த்து தொண்டர்கள் உள்ளே நுழைந்தனர். மேலும் பந்தல்கள் மீது ஏறி உள்ளே குதிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது

இந்நிலையில் தவெக நிகழ்ச்சிக்கு வந்த விஜய், மேடையிலிருந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தவெக கருத்தரங்கின் 2ஆம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தவெக முகவர்கள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடந்த இந்த தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “தவெக வெறும் ஓட்டுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் துவங்கப்பட்ட கட்சி கிடையாது. இங்கு சமரசம் எனும் பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்கமாட்டோம்.

நமது ஆட்சி அமைந்ததும், அது சுத்தமானதாக இருக்கும். நமது ஆட்சியில் ஊழலும், குற்றவாளிகளும் இருக்கமாட்டார்கள். எனவே எந்த தயக்கமும் இன்றி நமது பூத் ஏஜெண்ட்கள் மக்களைச் சந்தியுங்கள்.

இந்தச் சமயத்தில் உங்களுக்கு அறிஞர் அண்ணா சொன்னதை சொல்கிறேன், ‘மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய்’ என்பதை புரிந்து செயல்பட்டால், உங்கள் ஊர் சிறுவாணி நீர் போல் சுத்தமான ஆட்சியாக இது அமையும்.

இன்னும் வலிமையாக சொல்ல வேண்டும் என்றால், தவெக ஆட்சி, உண்மையான, தெளிவான, வெளிப்படையான நிர்வாகம் செய்யும் ஆட்சியாக அமையும். நீங்கள் ஒவ்வொருவரும் இதனை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

குடும்பம் குடும்பமாக, கோவிலுக்கு செல்வதுபோலவும், பண்டிகைகளை கொண்டாடுவது போலவும், நமக்காக குடும்பம் குடும்பமாக வாக்கு செலுத்த வர வேண்டும். மக்களும் அதனை கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படியான மன நிலையை மக்களுக்கு நீங்கள் ஏற்படுத்துங்கள். நீங்கள் தான் இதற்கு முதுகெலும்பு. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்று அவர் கூறினார்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest