
மதுரை,
பதிவு: புதன்கிழமை, ஜூலை 16, 2025, ஆனி 32, விசுவாவசு வருடம், 08:20 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. அதைபோல தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க கட்சியின் செயற்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் கடந்த 4-ம் தேதி நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். விஜய், சீமானின் அறிவிப்புகளால் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.
முன்னதாக நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று (புதன்கிழமை) அதிகாலை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே நடக்க இருக்கிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெறும் நிலையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டம் கூடிவிடும் என்பதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை முடிந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று மாநாட்டுக்கு அனுமதி பெற உள்ளோம். மாநாடு ஆகஸ்டு மாத இறுதி வாரங்களில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதற்காக 70 முதல் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பூமி பூஜை முடிந்து அடுத்தடுத்து பணிகள் விரைவாக நடைபெறும் என்றனர்.