
பதிவு: ஞாயிறுக்கிழமை, ஆகஸ்ட் 31, 2025 , ஆவணி 15, விசுவாவசு வருடம், 03.30 AM
சென்னை,
‘குற்ற வழக்கு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் பணி ஓய்வு தொடர்பான விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அவர்கள் ஓய்வு பெறும் நாளில், ‘சஸ்பெண்ட்’ செய்ய அரசு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில், அவர்களின் பணப்பலன்களை மட்டும் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், 2021 செப்டம்பர் 7ல் நடந்த சட்டசபை கூட்டத்தில், ‘ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர்களை ‘சஸ்பெண்ட்’ செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று அறிவித்தார்.
நடவடிக்கை அதை செயல்படுத்த, 2021 அக்டோபர் 11ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ‘ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படாமல் இருப்பதை, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி உறுதி செய்ய வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவது தொடர்பான விதிகளில், மேலும் சில திருத்தங்கள் செய்து, தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு துறை செயலர் சமயமூர்த்தி, அரசாணை வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு என, சில அடிப்படை உரிமைகளை ஏற்கனவே அரசு வகுத்திருந்தது. அதன்படி, தவறான நடத்தை குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியர் அல்லது குற்றவியல் புகார் விசாரணை நிலுவையில் இருப்பவர், பணி ஓய்வு பெற ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியால் அனுமதிக்கப்பட மாட்டார்.
அதை மாற்றி, அவரை ஓய்வு பெற அனுமதித்து, அரசு ஊழியர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933ல், அரசு திருத்தம் செய்துள்ளது. அதன் விபரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதேநேரம் ஓய்வு பெற அனுமதித்தாலும், பணப்பலன்களை நிறுத்த, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது…
இதன்படி, 2003 ஏப்ரல் 1ம் தேதி அல்லது அதன்பின் நியமிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியர், தன் தவறான நடத்தை அல்லது அலட்சியத்தால், அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டால், அந்த இழப்புக்காக அவரது ஓய்வூதிய கணக்கில், அரசு பங்களிப்பின் முழு அல்லது பகுதியை வசூலிக்க உத்தரவிடும் அதிகாரம், தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கு உண்டு.
ஆலோசனை இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம், அரசு ஆலோசனை பெற வேண்டும்.
அரசு துறை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால், ஊழல் தடுப்பு இயக்குநரால் விசாரணை முடிந்து இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை, ஊழியரின் அரசு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்படாது.
அரசு ஊழியர்களை பொறுத்தவரை, குற்றவியல் குற்றம் தொடர்பான புகார்; கடுமையான குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படாமல் ஓய்வு பெற்றாலும், நிலுவையில் உள்ள விசாரணைகளில் இறுதி உத்தரவு வெளியாகும் வரை, அவர் சேமித்த விடுப்புகளை பணமாக்குவது அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்படும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்ட பின்னரே, விடுப்பு பணப்பலன்கள் கிடைக்கும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.