இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம், 02-10:AM

புதுடெல்லி,

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை இன்று மாலை நடைபெறுகிறது.

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில்தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. என்டிஏ கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் (68) தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார். கோவையை சேர்ந்த இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட இவர் அனைவரிடமும் சுமுகமாக பழகக்கூடியவர். சர்ச்சைகளில் சிக்காதவர். கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானவர். மகாராஷ்டிர ஆளுநராக 2024 ஜூலை 31 முதல் பதவி வகிக்கிறார்.

இவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடுபவர் சுதர்சன் ரெட்டி (79). இவர் ஆந்திர பிரதேசத்தில் (இப்போது தெலங்கானா) ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அகுலா மைலாரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வுபெற்றார். தனது பணிக்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கறுப்பு பண வழக்கு விசாரணையில் மத்திய அரசு மெத்தனமாக செயல்பட்டதாக விமர்சித்தார். நக்சலைட்களுடன் சண்டையிட சத்தீஸ்கர் அரசு உருவாக்கிய சல்வா ஜூடும் அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்தவர்.

வேட்பாளர்கள் இருவரும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்களார் பட்டியலில் மாநிலங்களவை உறுப்பினர் 233 பேரும் (தற்போது 5 இடங்கள் காலி), மாநிலங்களவை நியமன உறுப்பினர் 12 பேரும், மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும் (ஒரு இடம் காலி) இடம்பெற்றுள்ளனர்.

யாருக்கு அதிக பலம்?

நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் என்டிஏ கூட்டணிக்கே அதிக பெரும்பான்மை உள்ளது. மொத்தம் உள்ள 542 மக்களவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மொத்தம் உள்ள 240 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஆளும் கட்சி கூட்டணிக்கு 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இரு அவைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 786. இதில், 394 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் அடுத்த குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

என்டிஏ கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பிஆர்எஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest