
பதிவு: திங்கள்க்கிழமை, செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம், 01-20:AM
சென்னை,
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று (செப்டம்பர் 13) வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ( செப்டம்பர் 14) வடக்கு தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய விதர்பா பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்களுக்கு நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் செப்டம்பர் 16ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 17ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 18ம் தேதி
சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுட மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இப்பதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.