
பதிவு: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம், 04-30:AM
புதுடெல்லி,
வக்பு (திருத்த) சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் அச்சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ‘வக்பு திருத்த சட்டம் முழுமைக்கும் இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆனால் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு நாங்கள் இடைக்கால தடை விதித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘வக்பு வாரியத்துக்கு சொத்துகளை தானாக அளிக்கும் நபர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்பதற்கான விதிகளை மாநில அரசுகளும் உருவாக்கும் வரை, இந்த விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளாகும் வக்பு சொத்து மீது தீர்ப்பாயம் முடிவு எடுக்கும் வரை அதன் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வகைச் செய்யும் திருத்த பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வக்பு சொத்து அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்தால் அது அதிகார பிரிவினை கோட்பாட்டுக்கு எதிராக அமைந்துவிடும்.
மத்திய வக்பு கவுன்சிலுக்கு நியமிக்கப்படும் 20 உறுப்பினர்களில் முஸ்லிம் அல்லாத இதர உறுப்பினர்கள் 4 பேருக்கு மேலும், மாநில வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்படும் 11 உறுப்பினர்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கும் மேலும் இருக்கக் கூடாது.
மாநில வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரியான அலுவல்சார்பான உறுப்பினர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பார் என்ற விதிக்குத் தடை இல்லை. இருப்பினும் இவ்வாறு அலுவல்சார்பான உறுப்பினரான தலைமை செயல் அதிகாரி பதவிக்கு கூடுமான வரையில் முஸ்லிமை நியமிக்க முயற்சி செய்ய வேண்டும்.
வக்பு சொத்துகள் பல ஆண்டுகளாகப் பதிவு செய்யப்படுவதால், வக்பு சொத்துகளைப் பதிவு செய்ய வகைச் செய்யும சட்ட திருத்தத்துக்குத் தடை விதிக்கத் தேவையில்லை’ என இடைக்கால தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.