

பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 07.55 AM சித்திரை 6, விசுவாவசு வருடம்
சென்னை,
ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடியை நீக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.
த.பெ.தி.க., சென்னையில் கடந்த 6ம் தேதி நடத்திய விழாவில் பேசிய பொன்முடி, விலைமாதுவுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடலை, ஹிந்துக்களின் புனித அடையாளங்களுடன் ஒப்பிட்டு, மிகவும் ஆபாசமாக, கொச்சையாக பேசினார்.
அந்த பேச்சின் வீடியோ பதிவு, நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தி.மு.க., தலைவர்களில் ஒருவரான கனிமொழியே, அமைச்சரை பலமாக கண்டித்து அறிக்கை விட்டார்.
அதைத்தொடர்ந்து, தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து பொன்முடியை நீக்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவார் என்று எதிர்பார்த்த பொதுமக்கள், இதனால் ஏமாற்றம் அடைந்தனர். ‘கட்சிப்பதவி வகிக்கவே தகுதி இழந்தவர், அமைச்சர் பதவியில் எப்படி நீடிக்க முடியும்? ஸ்டாலின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு’ என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
சென்னை ஐகோர்ட்டும், பொன்முடியை கடுமையாக கண்டித்தது. ‘இவ்வளவு ஆபாசமாக வேறு யாராவது பேசி இருந்தால், போலீசார் எத்தனையோ வழக்குகள் போட்டிருப்பர்.
‘அமைச்சர் என்றால் விதிவிலக்கா? யாருமே புகார் அளிக்காவிட்டாலும், பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அரசு அனுமதி தராததால், போலீஸ் அமைதியாக இருக்கிறது.பொன்முடியை நீக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., மகளிரணி, 16ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தொடர்ந்து, தமிழகம் முழுதும் நேற்று அ.தி.மு.க., கண்டன போராட்டம் நடந்தது. மதுரை ஆர்ப்பாட்டத்தில் பேசிய, எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் உள்ளிட்டோர், ”பெண்களை இழிவுபடுத்தும் அமைச்சர்களால், தி.மு.க., ஆட்சியை இழக்கும்,”’ என்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களை கைது செய்ய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பண்ணாரி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.பி., சத்தியபாமா பங்கேற்றனர். ”பெண்களை இழிவுபடுத்திய பொன்முடி, இனி தேர்தலில் நின்றால் டிபாசிட் பெற முடியாமல் தோற்க வேண்டும்,” என்று செங்கோட்டையன் சொன்னார்.திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட பல நகரங்களில், அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடந்தது. பெண்கள் அதிகமாக பங்கேற்றனர்.
ஆதீனங்கள் கண்டனம்
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோரும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு பலத்த கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு தயக்கம்
பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட்டே உத்தரவிட்டும், முதல்வர் அனுமதி அளிக்காமல் இருக்க என்ன காரணம் என்று, பல ஊகங்கள் உலா வருகின்றன. பொன்முடி மட்டுமல்ல, பல அமைச்சர்கள் அடிக்கடி நாவடக்கம் இல்லாமல் பேசி, சர்ச்சையில் சிக்குபவர்கள். இப்போது பொன்முடி மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்து வரிசையாக பல அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரலாம் என்பதால், அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.
வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்
ஹிந்துக்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவை சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாவட்ட தலைவர் சிவராஜ், செயலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல, பொன்முடியின் கொச்சைப் பேச்சை கண்டித்து, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன், இந்து புரட்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது ஏன்?
”ஐகோர்ட் உத்தரவு போட்ட பிறகும், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது, அவர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,” என, எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறினார்.அவர் கூறியதாவது: பொன்முடி பேசியது போன்ற இழிவான பேச்சை, இதுவரை தமிழினம் கேட்டதில்லை. முதல்வர் இதை எப்படி சகித்துக் கொள்கிறார் என்று வியப்பாக உள்ளது.
தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளனர். குற்றம் செய்வது மட்டுமல்ல; குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் குற்றமே. ஜெயலலிதா ஆட்சியில் ஒரு அமைச்சர் இப்படி பேசியிருந்தால், அமைச்சர் பதவியில் மட்டுமல்ல, கட்சி உறுப்பினராக கூட இருக்க முடியாது.நீதிமன்றமே கூறியும், முதல்வர் மவுனமாக இருக்கிறார். பொன்முடி கருத்தை, முதல்வர் ஏற்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.