தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல – அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி – தவெக தலைவர் விஜய்

Spread the love

பதிவு: புதன்கிழமை, மே 28, 2025, 04.30 AM வைகாசி 14, விசுவாவசு வருடம்

சென்னை,

தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி’ என, முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க., அரசையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆவேசமாக சாடியுள்ளார்.

சென்னையில், அவரது கட்சியின் பெண் உறுப்பினர்கள் மீது காவல் துறையினரை ஏவி அராஜக தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை வியாசர்பாடி முல்லைநகரில், தீ விபத்து ஏற்பட்டது. பல குடிசைகள் தீக்கிரையாகின. குடிசைகளை இழந்த மக்கள், அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு த.வெ.க., உறுப்பினர்கள் உடை, போர்வை, பாய், உணவு வழங்கினர். அதை பார்த்த போலீசார், த.வெ.க., நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர்.

போலீசார் வரம்பு மீறி பேசி, அத்துமீறி செயல்படுவதை பார்த்த த.வெ.க., செயற்குழு உறுப்பினர் கங்காவதி, 45, ‘மக்களுக்கு உதவி செய்வதை ஏன் தடுக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதை கேட்ட போலீசார், கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளினர். அதை தடுக்க ஓடினார் மகளிர் அணியின் தமிழ்செல்வி. அவரது ஆடையை பிடித்து இழுத்து தள்ளி விட்டனர் போலீசார். காயம் அடைந்த என் கட்சியினர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூடாது; அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவக்கூடாது என்று, காவல் துறை தடுக்க என்ன காரணம்? கேள்வி கேட்ட பெண்களை, ‘பூட்ஸ்’ காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையை பிடித்து கிழித்து தள்ளி விடுவதையும், முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா?

அப்படி அராஜகமாக, இழிவாகத்தான் பெண்களை நடத்த வேண்டும் என, காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளாரா? இது தான் ஆட்சி என்றால், இது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி. இதைவிட சான்று தேவையில்லை.

மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் ஸ்டாலின் அரசின் இந்த காட்டுமிராண்டித் தனமான அராஜக போக்கை கண்டிக்கிறேன்.

தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிரை பாதுகாப்போம் என்று பொய் சொல்லி ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்தபின், அவர்களுக்கு தி.மு.க.,வினரால் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.

பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனாலும், தொடர்ந்து காவல் துறை வாயிலாக அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதை ஏற்க முடியாது.

காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருக பலத்தை காட்டி, மக்களின் வெறுப்பை குவிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் ஸ்டாலின் அரசு, பெண் உரிமைகளை பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது.

மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், த.வெ.க., சார்பில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் சந்திக்க நேரிடும்..

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest