மதுரை மேயர் இந்திராணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

Spread the love

மதுரை மேயர் இந்திராணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

பதிவு: வெள்ளிக்கிழமை, மே 30, 2025, 10.50 AM வைகாசி 16, விசுவாவசு வருடம்

மதுரை,

மதுரை தி.மு.க., மேயர் இந்திராணி கணவரும், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன்வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

முதல்வர் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என மாவட்ட செயலர்கள் நடத்திய செயல்வீரர்கள் கூட்ட நாளில், போட்டியாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்தினார் மேயர். இதன் பின்னணியில் பொன்வசந்த் இருந்தார் என்பதால் கட்சி தலைமை அவர் மீது அதிருப்தியாக நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

வரவேற்பு

நாளை மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ளார். முதல்நாளில் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜூன் 1ல் கட்சி பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.

இதையொட்டி முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக மாவட்டச்செயலர்களான அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் மே 23ல் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர். ஆனால், அக்கூட்டத்துக்கு போட்டியாக, அதேநாளில் மாநகராட்சி கூட்டத்தை மேயர் நடத்தினார்.

ஆனால், தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, மா.செ.,க்கள் கூட்டிய கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆனால், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மேயர் இந்திராணி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் துணையுடன் கூட்டம் நடத்தினார். பல்வேறு தீர்மானங்களையும் கொண்டு வந்து, கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றினார் மேயர்.

மேயரின் இந்நடவடிக்கை, கட்சியின் மாவட்டச் செயலர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில், மேயர் இந்திராணியின் செயல்பாடுகள் அமைந்து இருக்கிறது என புலம்பிய மா.செ.,க்கள், இதன் பின்னணியில் மேயர் இந்திராணியின் கணவரும் கட்சிக்காரரான பொன்வசந்த் உள்ளார் என, கட்சி மேலிடத்துக்கு புகார் மேல் புகார் அனுப்பினர்.

‘முதல்வர் மதுரையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, போட்டியாக மாநகராட்சி கூட்டத்தை மேயர் கூட்டினார். அதற்கு முழு பின்னணியும் அவருடைய கணவர் பொன்வசந்த் தான்’ என அமைச்சர் மூர்த்தி தரப்பிலிருந்து, முதல்வருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார் முதல்வர். அவர்கள் விசாரித்து அளித்த அறிக்கையிலும் பொன்வசந்த் செயல்பாடுகள் குறித்து முழு விபரங்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஸ்டாலின், ‘இனியும் பொன்வசந்தை கட்சியில் வைத்திருக்க வேண்டாம்; நீக்கி விடுங்கள்’ என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின்பே, பொன்வசந்த் மீதான நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியானது என, மதுரை தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, மதுரை மாநகர தி.மு.க., நிர்வாகி கூறியதாவது: மாநகராட்சி கவுன்சிலர்களும், முதல்வர் வருகையை ஒட்டி நடத்தப்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் போகக் கூடாது என்ற எண்ணத்தில், கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட அதே நாளில், மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார் மேயர்.

வேறொரு நாளில் கூட்டத்தைக் கூட்டலாம் என கவுன்சிலர்கள் மேயர் இந்திராணியிடம் கேட்ட போது, வம்படியாக பேசிய மேயர், செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டிய அமைச்சரும் மா.செ.,வுமான மூர்த்தியை ஒருமையில் பேசி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பான ஆடியோ பதிவு அமைச்சருக்குச் சென்றது. அதை முதல்வர் ஸ்டாலின் வரை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின்பே, மேயர் கணவர் பொன்வசந்த் மீது, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மேயர் மீது நடவடிக்கை பாயலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்?

மேயர் இந்திராணிக்கு எதிர்ப்பாக இருக்கும் தி.மு.க., கவுன்சிலர்களே, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை மேயர் பொறுப்பில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாகவும், தி.மு.க., பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், இதை செய்யலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் மதுரை தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest