South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

GENERAL/பொது

நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம் – 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு

Spread the love

பதிவு: புதன்கிழமை, ஜூலை 09, 2025, ஆனி 25, விசுவாவசு வருடம், 03:10 AM

புதுடெல்லி,

நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் வங்கிகள், இன்சூரன்ஸ், அஞ்சல் நிலையங்கள், நிலக்கரி சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் நாங்கள் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆனால், அதற்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வருடாந்திர தொழிலாளர் மாநாட்டை அரசு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. வணிகம் செய்வதை எளிதாக்குதல் என்ற பெயரில் முதலாளிகளுக்கு சாதகமான கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. அவுட்சோர்சிங், ஒப்பந்த வேலைவாய்ப்பு மற்றும் தற்காலிக நியமனங்கள் அதிகரித்து வருகின்றன. தொழிற்சங்க இயக்கத்தை முடக்குதல், வேலை நேரத்தை அதிகரித்தல், தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமையை பறித்தல், வேலைநிறுத்த உரிமையை பறித்தல் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவதை குற்றமற்ற தாக்குதல் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளன.

வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரித்தல், இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். ஆனால், முதலாளிகளை ஊக்குவிக்க இஎல்ஐ (வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்தை அரசு மும்முரமாக செயல்படுத்துகிறது.

அரசுத் துறைகள் இளம் திறமையாளர்களை பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, ஓய்வுபெற்ற ஊழியர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துகின்றன. ரயில்வே, தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம், எஃகு மற்றும் கல்வித் துறைகளில் இந்த நியமனம் அதிகமாக உள்ளது. இது, நாட்டின் மக்கள் தொகையில் 35 வயதுக்கு உட்பட்ட 65 சதவீதம் பேருக்கும், வேலையின்மை அதிகமாக உள்ள 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும். எனவே முறைசார் மற்றும் முறைசாரா அல்லது அமைப்புசாரா பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்களால் வேலைநிறுத்த ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற ஆதரவாளர்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புற தொழிலாளர்கள்…

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் கூறும்போது, “வேலைநிறுத்தத்தில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைகிறார்கள்” என்றார். இந்து மஸ்தூர் சபா நிர்வாகி ஹர்பஜன் சிங் சித்து கூறும்போது, “வேலைநிறுத்தம் காரணமாக வங்கி, அஞ்சல், நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், மாநிலப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும்” என்றார்.

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம், நிலக்கரி அல்லாத கனிமங்கள், எஃகு, மாநில அரசு துறைகள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் பெரிய அளவில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.இதற்கு முன் 2020 நவம்பர் 26-ம் தேதி, 2022 மார்ச் 28-29 மற்றும் 2023 பிப்ரவரி 16-ம் தேதிகளிலும் தொழிற்சங்கங்களால் இதேபோல நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest