வழக்கை விரைவாக முடிக்கும் அக்கறையே இல்லையா? செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

Spread the love

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 31, 2025 ,ஆடி 15, விசுவாவசு வருடம், 02.40 AM

புதுடெல்லி,

‘செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற அக்கறை உங்களுக்கு இல்லையா?’ என, தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் – நடத்துநர் உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு பணி நியமன ஆணை வழங்கியதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.

விசாரணை இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை 2023, ஜூன் 14ல் கைது செய்தது.

அவர், 15 மாத சிறை தண்டனைக்கு பின் ஜாமினில் வெளியே வந்தார். அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘ஜாமினை ரத்து செய்ய நேரிடும்’ என, உச்ச நீதிமன்றம் எச்சரித்த பின், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்தியா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். 2022, செப்., மாதம் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில பத்திகள் தனக்கு எதிராக இருப்பதாகவும் அவற்றை நீக்கக்கோரியும் செந்தில் பாலாஜி தனியாக ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மூன்று வழக்குகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அதிகார பலம் அப்போது, மனுதாரர் ஒய்.பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ”செந்தில் பாலாஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், 2,500 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒன்றாக விசாரித்தால், இப்போதைக்கு தீர்ப்பு வராது.

”எனவே பிரதான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர், நேரடி உதவியாளர், தனிச்செயலர் மற்றும் அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களை மட்டும் தனியாக விசாரிக்க வேண்டும்,” என, வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்தியாவிலேயே, இத்தனை பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவும், சாட்சிகளாகவும் இருக்கக்கூடிய வழக்கு இதுவாகத்தான் இருக்கும். இத்தனை பேரையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம் தான் வேண்டும்.

நீங்கள் அதிகார பலமிக்க அரசியல்வாதி. இந்த வழக்கினால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து விரைவில் வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா?

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பு இதுவரை கேட்காதது ஏன்? சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கலாம் என்றால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். உங்கள் திட்டம் தான் என்ன?

தெளிவான திட்டம் இந்த விவகாரத்தை த மிழக போலீஸ் எவ்வாறு கையாளப் போகிறது என்பதை தெளிவான திட்டத்துடன் நீதிமன்றத்திடம் தெரிவியுங்கள்.

யார் யாரிடம் எவ்வளவு காலம் விசாரணை நடத்தப் போகிறீர்கள்? விசாரணை எப்போது முடியும் என்பது உள்ளிட்ட விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக அமைச்சரிடம் நேரடியாக பணம் கொடுத்தவர்கள் யார்? இதில் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் யார்? உள்ளிட்ட விபரங்களையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் எனவே இவை அனைத்தையும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக., 11க்கு ஒத்தி வைத்தனர்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest