
பதிவு: ஞாயிறுக்கிழமை, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம், 06.30 PM
போடிநாயக்கனூர்,
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாரும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் கம்பம் தொகுதியில் மக்களை சந்தித்த அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட தேவர் சிலை அருகே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
எம்ஜிஆர் பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் அண்ணா திமுக கட்சியைத் தொடங்கினார். ஆட்சியைப் பிடித்ததும் சுமார் பத்தரை ஆண்டுகாலம் நல்லாட்சி கொடுத்தார். புரட்சித் தலைவி அம்மாவும் சோதனைகளைக் சந்தித்து மக்களின் பேராதரவு பெற்று சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் அம்மாவின் அரசு நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்தோம்.
ஆட்சிக் காலத்தில் வறட்சியையும், கஜா புயலையும், கொரோனாவையும் சந்தித்தோம். புயல் வேகத்தில் அரசு செயல்பட்டது. கொரோனா காலத்தில் ஓராண்டு விலையில்லா பொருட்களும், ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் கொடுத்தோம்.
தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும்
பொருளாதாரச் சூழலால் ஏழைப்பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். அண்ணா திமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
நகராட்சியில் பிளான் அப்ரூவல் வாங்க ஆயிரம் சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இன்று திமுக ஆட்சியில் ஆயிரம் சதுரடிக்கு 74 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும். 100% உயர்வு. பத்திரப்பதிவில் 10% கமிஷன் கேட்கிறார்கள், அதிகாரிகள் மேலிடத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று வசூல் செய்த பின்னர்தான், பதிவு செய்கிறார்கள்.
ஸ்டாலின் பச்சை பொய்
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. மாணவர்கள் பெற்ற கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றனர், ரத்து செய்யவில்லை. ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ கூடுதலாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்றனர், குறைக்கவில்லை. வேண்டுமென்றே பச்சைப் பொய் சொல்லி இருக்கிறார் திமுக தலைவர்.
நல்லாட்சி என்றால் ஒரு அரசில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை தொடர வேண்டும். ஆனால் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்தாலே அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டனர். அம்மா மினி கிளினிக்கில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை.
இனி ஏழை மக்கள் வீடுகட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இரவில் கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். பல கட்டடங்களை இன்று முழுமை பெறவில்லை, ஏழைகளால் வீடு கட்டவே முடியவில்லை.
எல்லாம் பொய்
உங்களுடன் ஸ்டாலின் மனு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆற்றில் கிடக்கிறது, புதுக்கோட்டையில் வடை கட்டி கொடுக்குறார்கள். இப்படியொரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் ஏமாற்ற திமுகவை விட்டால் எந்தக் கட்சியுமே கிடையாது.
நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி.
இதுவரை ரகசியத்தைச் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கோடி கையெழுத்து பெற்று சேலம் பெத்தநாயக்கம் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாட்டில் வைத்தனர். அப்போது ஸ்டாலின் பேசும்போது பறந்துபோய் திமுகவினர் காலில் மிதிபட்டது. இவ்வளவுதான் திமுகவின் லட்சணம். மக்களை ஏமாற்றுவதில் திமுகவுக்கு மற்ற எந்தக் கட்சியும் ஈடில்லை.
குழு அரசு
ஒரு திட்டத்தை அறிவித்து, அதற்கு ஒரு குழு போடுவார். அப்படியே அதை கைவிட்டுவிடுவார். திமுக அரசு குழு அரசாகிவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு என்று ஒரு திட்டம். எல்லா கட்சிகளும் விருப்பப்பட்டவர்களிடம் படிவத்தைக் கொடுத்து உறுப்பினராகச் சேர்ப்பார்கள். மக்கள், தொண்டர்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதால் வீடுவீடாகச் சென்று எங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டனர். அப்படி கேட்டும் யாராவது கையெழுத்துப் போடவில்லை என்றால் உங்களுக்கு உரிமைத் தொகை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டி, இதுவரை 90 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்தார்களாம். உண்மையாக சேர்த்தார்களா..? மிரட்டித்தானே சேர்த்தார்கள்.
வரும் தேர்தல் வாரிசு அரசியலுக்கும் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இது உங்கள் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பினை நல்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கொடுக்கப்படும்.
இந்த தொகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது, கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது, சட்டக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்பட்டது, தார்சாலை அமைக்கப்பட்டது, வீரபாண்டி சிப்காட் கொண்டுவரப்பட்டது, பென்னி குவிக் மணிமண்டபம் கட்டப்பட்டது. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்”.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி. நாராயணசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.