3 பேருக்கு கத்திக்குத்து – விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை

Spread the love

பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025, 04.10 AM சித்திரை 6, விசுவாவசு வருடம்

சான் பிட்ரோ,

பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்று இருப்பது விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெலிஸ். குட்டி நாடான பெலிஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 4 லட்சம்தான். பெலிஸ் நாடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பெலிஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பெலிசில் இருந்து சிறிய ரக விமானத்தில் 14 பயணிகள் சான் பிட்ரோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த விமானத்தில் 14 பயணிகளுடன், 2 விமானிகள் இருந்தனர். நடு வானில் விமானம் பயணித்து கொண்டிருந்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியை எடுத்து பயணிகளை மிரட்டினார். அதோடு பயணிகளை தாக்கினார். இதில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் விமானத்தை கடத்த முயன்றார்.இதனால் விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பயணிகள் அனைவரும் பயந்துபோயினர். அதேநேரத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமானத்தை கடத்திய நபரை சுட்டார். இதில், விமானத்தை கடத்த முயன்றவரின் உடலில் குண்டு பாய்ந்தது. பின்னர், விமானம் மீண்டும் பெலிஸ் நகரில் உள்ள பிலிப் எஸ்டபிள்யூ கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய அந்த நபர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,விமானத்தை கடத்த முயன்ற நபரின் பெயர் அகின்யிலா சா டெய்லர் (வயது 49) என்பதும் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடந்த வாரம் பெலிஸ் நகருக்கு வந்துள்ளார். அகின்யிலா சா டெய்லர் விமானத்தை கடத்த முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest