

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 06.40 AM சித்திரை 11, விசுவாவசு வருடம்
புதுடெல்லி,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் உறவை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கடும் கோபத்துடன் இந்தியா திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
இந்தியா — பாகிஸ்தான் இடையே, 1960-ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் உடனான வாகா — அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
வாகா — அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்.
‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான ‘விசா விதி விலக்கு’ பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்
டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படையினர் உட்பட அனைத்து பாகிஸ்தான் அதிகாரிகளும் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகம் உடனடியாக மூடப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இந்திய அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்ப உத்தரவிடப்படுகிறது.