

பதிவு: புதன்கிழமை, மே, 07, 2025, 05.20 AM சித்திரை 24, விசுவாவசு வருடம்
புதுடில்லி,
இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று (மே.07) நள்ளிரவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை துவக்கியது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடு முழுதும் இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அவசர உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி, பக்வால்பூர், முஷாராபாத் ஆகிய மூன்று இடங்களில் இன்று (மே.07) நள்ளிரவு நம் ராணுவம் ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாதிகள் முகாமினை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடவடிக்கையை துவக்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது ‛ ஜெய்ஹிந்த்’ என ராணுவ எக்ஸ்தளத்தில் பதிவேற்றியுள்ளது. மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.