குற்றவாளிகளை நெருங்க முடியாத வழக்குகளில் அப்பாவிகள் கைது? – டி.டி.வி. தினகரன் கேள்வி

Spread the love

பதிவு: சனிக்கிழமை, மே 31, 2025, 10.50 AM வைகாசி 17, விசுவாவசு வருடம்

சென்னை.

இதுவரை எத்தனை வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்குகளில் அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறதா தமிழக காவல்துறை என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர், மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைச் சம்பவங்களை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட அதே கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது யார்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டறிய முடியாத காவல்துறை, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தியதற்கும், சென்னிமலை மற்றும் ஒட்டன் குட்டையில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் எனக்கூறி 11 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படும் செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்கில், தங்கள் மீதான அவப்பெயரை போக்க அப்பாவி மக்களை வற்புறுத்தி கொலை செய்ததாக வாக்குமூலத்தை பெற்று அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியிருக்கிறதா? இதுவரை எத்தனை கொலை வழக்குகளில் இது போன்ற அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் தற்போது எழுகிறது.

மேலும், சென்னிமலை மற்றும் ஒட்டன்குட்டை கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி 11 பேரை சிறையில் அடைத்த விசாரணை அதிகாரி கோகுலகிருஷ்ணன், சிவகிரி கொலை வழக்கு குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த அடுத்த ஓரிரு தினங்களில் மாற்றப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் முதல், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் வரையிலான முக்கிய பிரமுகர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என பெருமை பேசுவது வெட்கக் கேடானது.

எனவே, வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றிவிட்டால் வழக்கு விசாரணை முடிந்து விடும் என தப்புக் கணக்கு போடாமல், சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் தானா? என்பதை விரிவாக விசாரிப்பதோடு, காவல்துறை மீதான அழுத்தத்தை குறைக்க பொய்வழக்கில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest