அமித் ஷா என்ன பேசப்போகிறார்? – மதுரையில் அமித்ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு

Spread the love

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 08, 2025, 03.10 AM வைகாசி 25, விசுவாவசு வருடம்

மதுரை,

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை பயணம், தமிழக அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத் என பல மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற வியூகம் அமைத்த அவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேச இருக்கிறார்.

தி.மு.க., செய்து வரும் ஊழலால், தமிழகம் எந்த அளவிற்கு நாசமாகி உள்ளது என்பது தொடர்பாக, பல குறிப்புகளை தன்னுடன் கொண்டு வந்துள்ளாராம்.

‘மத்திய உளவு அமைப்புகள் வாயிலாக, தி.மு.க.,விற்கு எதிராக கிடைத்துள்ள விபரங்கள், தி.மு.க., சீனியர்களே, பா.ஜ., தலைவர்களிடம் ‘போட்டுக் கொடுத்த’ ஊழல் விவகாரங்கள் என, பலவற்றை பற்றியும் விரிவாக பேசுவார் அமித் ஷா என்கிறது டில்லி பா.ஜ., வட்டாரம்.

உள்துறை அமைச்சருக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த 10 நண்பர்கள், தமிழகம் முழுக்க ஏற்கனவே பயணம் செய்து வருகின்றனராம். இவர்கள், தமிழகத்தில் தொழில் செய்யும் சக குஜராத்திகளோடு தொடர்பு கொண்டு, கள நிலவரம் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

அத்துடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், ஏற்கனவே தமிழகத்தில் களம் இறங்கிவிட்டது. இவர்கள் வாயிலாக தனக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து, தி.மு.க.,வை ஒரு வழியாக்க திட்டமிட்டுள்ளாராம் அமித் ஷா.

‘வரும் 2026 தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கிவிட்டது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முன்பாக, அமித் ஷாவின் தமிழக, ‘விசிட்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது’ என, சொல்லப்படுகிறது.

மதுரையில் அமித்ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு

மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று (ஜுன் 8) நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்றிரவு 10:40 மணிக்கு வந்தார்.

கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை, மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன், வானதி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் வரவேற்றனர்.

பின் தனியார் ஓட்டலில் அமித்ஷா தங்கினார். இன்று காலை 11:20 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா தரிசனம் செய்கிறார். பின் மாலை 4:05 மணிக்கு பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அமித்ஷா வருகையையொட்டி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest