

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 08, 2025, ஆனி 24, விசுவாவசு வருடம், 04:30 PM
கடலூர்,
கடலூர் அருகே இன்று ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அக்காள் தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் கடலூர் சுற்றுப் பகுதி மாணவ -மாணவிகள் தனியார் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுவது வழக்கம். கடலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் இருந்தும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன்கள் அந்த பள்ளிக்கு வருவது உண்டு. இன்று காலை சங்கர் என்ற டிரைவர் தனது வேனில் செம்மங்குப்பத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை ஏற்றிக் கொண்டு வந்தார். அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று மாணவ -மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகவேகமாக சென்று கொண்டு இருந்தார். காலை 7.40 மணிக்கு அவரது வேன் செம்மங்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதிக்கு வந்தது.
நொடிப் பொழுதில் விபத்து
அப்போது அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்ததால் கேட் மூடப்பட்டது. பள்ளி வேன் டிரைவர் வேகமாக செல்ல வேண்டும் என்று கூறியதால் அந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. உடனே வேன் தண்டவாளத்தின் மத்திய பகுதி வரை சென்ற போது ரெயில் வருவதைப் பார்த்த டிரைவர் சங்கர் கடும் அதிர்ச்சி அடைந்தார். ரெயில்வே கேட்டை கடந்து விடலாம் என்று வேனை வேகமாக ஓட்டினார் டிரைவர். ஆனால் அடுத்த ஓரிரு நொடிகளில் அந்த ரெயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைகுலைந்து என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது. மோதிய வேகத்தில் வேனை ரெயில் இழுத்து சென்றது. சுமார் 50 மீட்டர் தூரம் பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டதால் அது நொறுங்கி தகர்ந்தது.வேன் மீது ரெயில் மோதிய சத்தம் அந்த பகுதி முழுக்க கேட்டது. வேனுக்குள் இருந்த 3 மாணவர்களும், ஒரு மாணவியும் அலறினார்கள்.
இதை கண்டதும் ரெயில் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அப்போது வேன் தண்டவாளம் ஓரத்தில் நொறுங்கி அப்பளமாக சிதறியது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் 6ம் வகுப்பு படித்து வந்த நிவாஸ் என்ற மாணவர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தார். மேலும் வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற 11ம் வகுப்பு மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. உடனடியாக மாணவன் நிவாஸ் உடலையும், மாணவி சாருமதி உடலையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்காள் தம்பி பலி: கதறி அழுத பெற்றோர்கள்
மேலும் வேன் டிரைவர் சங்கர், மாணவர்கள் செழியன் (வயது 15), விஸ்வேஸ் (16) ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பள்ளி வேன் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. உயிரிழந்த செழியன், உயிரிழந்த மாணவி சாருமதியின் சகோதரர் ஆவார். ஒரே குடும்பத்தில் அக்காவும், தம்பியும் பலியானது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியே சோகமாக காட்சியளித்தது.
இந்நிலையில், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை இத்தகைய பணியில் அமர்த்துவது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று பெற்றோர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார். கேட் கீப்பர் குறித்து பேசிய அவர், அந்த கேட் கீப்பர் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டார் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமன்றி அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மொழி பிரச்னை இருந்துள்ளது. முதலில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை இதுபோன்ற முக்கிய இடங்களில் பணியமர்த்துங்கள். ரெயில்வேயின் கவனக்குறைவுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம் ஏன்னு ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
அமைச்சர் நேரில் ஆறுதல்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து கேள்விப் பட்டதும் அமைச்சர் சி.வெ. கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் பிரவின் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன் ஆகியோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் என்னையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தையும் செல்போனில் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினேன். காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர்களது பெற்றோர் விருப்பப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும் என்று அமைச்சர் கூறினார்
திறந்து கிடந்த கேட்: விபத்துக்கு யார் காரணம்?
ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கி உள்ளனர். இதையடுத்து கேட் கீப்பரை பொது மக்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து சென்ற போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி. செந்தில்குமார் பேட்டி
இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று கூறியுள்ளார்.

கேட் கீப்பர் கைது
இதற்கிடையே பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். பங்கஜ் சர்மாவிடம் ரெயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் விவரம்
இந்த விபத்து காரணமாக தஞ்சை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் இந்த வழியே செல்ல முடியாததால், ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
இந்த நிலையில், விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190) சிதம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமாகியுள்ளது. அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே கேட் திறந்து தான் இருந்தது; நான் திறக்க சொல்லவில்லை: டிரைவர் பேட்டி
ரெயில்வே கேட் திறந்து தான் இருந்தது. எனவே தான் நான் சென்றேன். கேட் கீப்பரிடம் நான் கேட்டை திறக்கும்படி கூறவில்லை என்று வேன் டிரைவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் முரண்பாடு இருந்தது.
முதலில் வெளியிட்ட அறிக்கையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடுவதற்கு முற்பட்டபோது, வேன் ஓட்டுநர் கேட்டதால் வாகனத்தை அனுமதித்ததாகக் கூறப்பட்டது.
பின்னர், திருத்தப்பட்ட இரண்டாவது அறிக்கையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடியதாகவும் வேன் ஓட்டுனர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மீண்டும் கேட்டை திறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வேன் ஓட்டுநர் பேட்டி
இந்நிலையில் வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
வேன் விபத்து சம்பவத்தில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (வயது 48) விளக்கம் அளித்துள்ளார். “நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது. வாகனத்தில் 4 மாணவர்கள் இருந்தனர். நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை.. ரெயில் சென்று விட்டது என நினைத்து கேட்டை கடந்தோம். கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை. அதனால்தான் வாகனத்தை இயக்கினேன்” என்று கூறினார்.
அதேபோல், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ் கூறுகையில், “வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடப்படவில்லை. ரெயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. பள்ளி வேன் கடந்து சென்றபோது ரெயில் மோதியது. நான் விழுந்து எழுந்த போது கூட அந்த கேட் கீப்பர் வர வில்லை. ரெயில்வே கேட்டை வேன் டிரைவர் திறக்க சொல்லவில்லை, கேட் கீப்பர் சொல்வது முற்றிலும் பொய்..” என்று கூறினார்.