
பதிவு: புதன்க்கிழமை,, செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம், 02-10:AM
புதுடெல்லி,
நாட்டின், 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 68, நேற்று தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, ‘இண்டி’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை அவர் வீழ்த்தினார். நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, கடந்த ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தியது.
ஓட்டுப்பதிவு இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய, செப்., 9ல் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச் செயலர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டார்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இவரது வெற்றி உறுதி என்ற நிலையிலும், வீம்புக்காகவே, காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி, தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை, 79, வேட் பாளராக அறிவித்தது.
இந்நிலையில், டில்லியில் பார்லிமென்டின் முதல் தளத்தில் உள்ள வசுதா அரங்கில், துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. திட்டமிட்டபடி, காலை 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், முதல் நபராக, பிரதமர் நரேந்திர மோடி ஓட்டளித்தார்.
இதன்பின், ஹிமாச்சல் வெள்ள பாதிப்பை பார்வையிட புறப்பட்டுச் சென்றார்.
அவர் சென்றதும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவ்ராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு, எல்.முருகன் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்கள் அனைவருமே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாரயணன் உள்ளிட்டோரும் ஓட்டளித்தனர்.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் காலை யிலேயே ஓட்டளித்தனர்.
புறக்கணிப்பு சிறையிலிருக்கும் ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்.பி., ‘இன்ஜினியர்’ ரஷீத், தேர்தல் கமிஷன் அனுமதியோடு தபால் ஓட்டு போட்டதாக தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சக்கர நாற்காலியில் வந்து ஓட்டளித்தார்.
கனிமொழி, பாலு உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் காலையிலேயே ஓட்டளித்தனர். அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் தம்பிதுரை, சண்முகம், இன்பதுரை, தனபால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., தர்மர் ஆகியோர் ஒன்றாக வந்து ஓட்டளித்தனர்.
பிற்பகல் 3:00 மணிக்கே, 96 சதவீத ஓட்டுகள் பதிவானதாக ராஜ்யசபா செயலகம் தெரிவித்தது.
மாலை 5:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், 6:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. லோக்சபா, ராஜ்யசபாவின் மொத்த பலம், 788. இதில் ராஜ்யசபாவில் ஆறு; லோக்சபாவில் ஒரு இடம் காலியாக இருப்பதால், 781 எம்.பி.,க்கள் ஓட்டளிக்க தகுதியானவர்கள்.
பாரத் ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம் ஆகியவை தேர்தலை புறக்கணித்த நிலையில்,மொத்தம் 767 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். வெற்றிக்கு, 384 ஓட்டுகள் தேவை என்ற நிலையில், 452 ஓட்டுகள் பெற்று, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இண்டி கூட்டணியின் பி.சுதர்சன் ரெட்டி, 300 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
12ல் பதவியேற்பு
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.
யார் அந்த 14 பேர்?
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 427 எம்.பி.,க்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆதரவு வழங்கியது. இக்கட்சிக்கு, 11 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன்படி பார்த்தால், தே.ஜ., கூட்டணியின் மொத்த பலம், 438. ஆனால், 14 ஓட்டுகள் கூடுதலாக, அதாவது, 452 ஓட்டுகள் பெற்று, சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், 315 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக சொன்ன இண்டி கூட்டணி, 300 ஓட்டுகளையே பெற்றுள்ளது. இதனால், அக்கூட்டணியின் 15 எம்.பி.,க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், செல்லாத ஓட்டுகளை போட்ட 15 எம்.பி.,க்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புறக்கணித்த கட்சிகள் ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது. இக்கட்சிக்கு ராஜ்யசபாவில் ஏழு எம்.பி.,க்கள் உள்ளனர். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியும் தேர்தலை புறக்கணித்தது. இக்கட்சிக்கு, நான்கு எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். பஞ்சாபில் செயல்படும் சிரோண்மணி அகாலி தளமும் தேர்தலை புறக்கணித்தது. இக்கட்சிக்கு லோக்சபாவில் ஒரேயொரு எம்.பி., மட்டுமே உள்ளார்.
‘பயோடேட்டா’
1957 அக்., 20
திருப்பூரில் பிறந்தார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., முடித்துள்ளார்
1998, 1999
கோவையில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு
2003 – 2006
தமிழக பா.ஜ., தலைவர்
2004
இந்தியா சார்பில் ஐ.நா., சபைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம் பெற்றார்
2016
தேசிய கயிறு வாரிய தலைவர்
2023 பிப்., 12
ஜார்க்கண்ட் கவர்னர்
ஜூலை 27
மஹாராஷ்டிரா கவர்னர்
2025 ஆக., 17
தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு
செப்., 9
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி
- இரண்டாவது தமிழர்
ஆர்.வெங்கட்ராமனுக்கு (1984 — 1987) அடுத்து துணை ஜனாதிபதியான இரண்டாவது தமிழர் ஆனார், சி.பி.ராதாகிருஷ்ணன்.
*விளையாட்டு ஆர்வம்
கல்லுாரியில் படித்த போது டேபிள் டென்னிசில் சாம்பியன், ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். கிரிக்கெட்,
*வாலிபால் இவருக்கு பிடித்த விளையாட்டுகள்.