அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தை மறைத்தேனா?சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் ஸ்டாலின்: எடப்பாடி காட்டம்‘‘மிரட்டினால் தி.மு.க. பணியும்; நாங்கள் அப்படி அல்ல’’ - South Indian Crime Point
Thursday, October 16, 2025
- Investigation Weekly Tamil Magazine

அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தை மறைத்தேனா?சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் ஸ்டாலின்: எடப்பாடி காட்டம்‘‘மிரட்டினால் தி.மு.க. பணியும்; நாங்கள் அப்படி அல்ல’’

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2025, புரட்டாசி 3, விசுவாவசு வருடம் 02-30:AM

சேலம்,

அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வரும்போது நான் முகத்தை மறைத்துக் கொண்டு வந்ததாக சிறுபிள்ளைத்தனமாக ஸ்டாலின் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார்.

முகத்தை மறைத்துக் கொண்டு செல்ல என்ன இருக்கிறது. நான் பகிரங்கமாகத் தானே சென்றேன் என்றும் எடப்பாடி கூறினார்.

செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு கட்சி தலைமை முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது முகத்தைத் துடைத்தேன், அதை வைத்து அரசியல் செய்வதாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சேலம் மாவட்டம் ஓமலூரில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-–

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று அண்ணா தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த சுற்றுப் பயணத்தின்போது கிடைத்த வரவேற்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை உணர்த்தி இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு அண்ணா தி.மு.க. ஆட்சி 2026-ல் அமையும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். தி.மு.க .எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகம், பத்திரிக்கை மக்கள் இடத்திலே காண்பித்து விட்டனர்.

இரட்டை வேடம்

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி காட்டினார், கருப்பு பலூன் விட்டார். ஆனால், திமுக ஆளும் கட்சியான பிறகு பிரதமரை வரவழைத்து அவர் முன்னிலையில் செலோ, செஸ் போட்டிகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார். அதோடு, பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது வெள்ளைக் குடை கொடுத்தார். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரியாகவும், ஆளும் கட்சியான பிறகு வேறு மாதிரியாகவும் அக்கட்சி நடந்து கொள்ளும்.

அண்மையில் காங்கிரஸ் மாநாடு நெல்லையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சோடங்கர், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 117 இடங்களில் போட்டியிடும் என்று கூறி இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி கடலூரில் பேசும்போது, கடந்த 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அவர்கள் சாறை குடித்து விட்டு சக்கையைத்தான் எங்களுக்குத் தருகிறார்கள். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்று கூறி இருக்கிறார். ஆனால், இதுபற்றி எல்லாம் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

அமித்ஷாவுடன் தனியே பேச்சு

எனது சமீபத்திய டெல்லி பயணம் குறித்து நான் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் சென்றேன். கடந்த 16-ம் தேதி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு காரில்தான், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்திக்க நான் சென்றேன். என்னுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் வந்தார்கள். நாங்கள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

அதேபோல், அன்றைய இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கவும் அரசு காரில்தான் சென்றேன். அப்போதும் என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வந்தனர். நாங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்துக் கொண்டிருந்தபோது நேரம் ஆகிவிட்டதால், என்னுடன் வந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள். அதன்பிறகு, நான் 10-20 நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு பின்னர் கிளம்பி வந்தேன்.

முகத்தை மூடவில்லை

நான் அரசு காரில் வரும்போது முகத்தை துடைத்ததை, முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் இவ்வாறு அவதூறு செய்திகளை வெளியிடுவது வேதனையாக உள்ளது. இந்திய ஊடகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழக ஊடகங்கள் இப்படி தரம் தாழ்ந்து செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? பரபரப்பான செய்தி கிடைக்கவில்லை என்பதற்காக இதை பரபரப்பாக்குவதா? ஊடகங்கள், பத்திரிகைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஒரு தலைவரை கட்சியின் பொதுச் செயலாளரை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாக சித்தரிப்பது சரியல்ல. இதை பத்திரிகைகள் உணர வேண்டும்.

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலினும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு நான் வெளியே வரும்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்ததாகப் பேசி இருக்கிறார். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அரசாங்க காரில் சென்று வந்ததை முதல்வர் இப்படி பேசலாமா? முகத்தை மூடிக்கொண்டு செல்ல என்ன இருக்கிறது? பகிரங்கமாகத்தானே உள்ளே சென்றேனே. ஒரு முதல்வர் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். அதனால்தான் அவரை ‘பொம்மை முதல்வர்’ என்கிறோம்.

சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் ஸ்டாலின்

அவரிடம் சரக்கு இல்லை. எங்களை குற்றம் சொல்வதற்கு அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அப்படி நடக்கவும் இல்லை. எங்கள் ஆட்சி சிறப்பாக இருந்தது. அதனால்தான் அதில் குற்றம் குறை கண்டுபடிக்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக முதல்வர் இப்படி பேசுவது முதல்வருக்கு அழகல்ல.

முகமூடி அணிந்தார் என மலிவான அரசியல் செய்கின்றனர். நான் முகமூடி அணியவில்லை. டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அண்ணா தி.மு.க.வில் நுழைந்தார். 19.12.2011ல் அண்ணா தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 10 ஆண்டுகள் அவர் கட்சியில் இல்லை. இதுதொடர்பாக ஜெயலலிதா கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறது. பின்னர் ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் அண்ணா தி.மு.க.வுக்கு வந்தார். அப்படிப்பட்ட அவர் என்னைப் பற்றி பேசுகிறார். இது தேவையில்லை. அவர் எந்த உள்நோக்கத்துடன் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணமும் தெரியவில்லை. என்னை பற்றி விமர்சிப்பதற்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை.

அமித்ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. அண்ணா தி.மு.க. பிரசார பயணம் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று அமித்ஷா ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டார். பாஜகவுக்கு அமித்ஷா, அண்ணா தி.மு.க.வுக்கு நான் சொல்வதே இறுதியானது.

செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்? இன்று செந்தில் பாலாஜியை பாராட்டும் இதே முதல்வர் தான், எதிர்க்கட்சியாக இருந்த போது, ”செந்தில் பாலாஜியும், அவர் தம்பியும் கொள்ளை, கடத்தல் என கரூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இப்போது மட்டும் அவர் புனிதமாகிவிட்டாரா என்ன?

(செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை எடப்பாடி பழனிசாமி காட்டினார். இதன்பின், ஊழல்வாதி என கூறிய செந்தில்பாலாஜிக்கு எப்படி அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.)

அண்மை காலமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகின்றனர். கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அண்ணா தி.மு.க.வில் வழக்கம். செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும்; உட்கட்சி விவகாரத்தை வெளியே சொல்ல முடியாது.

ஒரு விவசாயி கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகவோ, முதல்வராகவோ வந்தால் எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டும் என்பதற்கு நான் தான் உதாரணம். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என அமித்ஷாவிடம் வலியுறுத்தி உள்ளேன்.

எல்லோரையும் பஸ் எடுக்க வைத்திருக்கிறது அதிமுக. எனக்கு பல்லாயிரம் கோடி கிடையாது. அதனால் அமித்ஷாவை சந்திக்க கிடைத்த காரில் செல்கிறேன். முதல்வர் வெளிநாட்டில் எங்கெல்லாம் சென்றார் என யாருக்கு தெரியும்? நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பேசுவதெல்லாம் பொய். நீட் விவகாரத்தில் தொடர்ந்து ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். பொய் பேசி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்ன ஆனது. தி.மு.க. திட்டமிட்டே மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது.

நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது, ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர், இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது. திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி முறைகேடு போன்ற தீவிர பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், நான் முகத்தை மூடியதா பிரச்சினை?

மேலும் அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கார் இல்லாததால் கிடைத்த காரில் வந்தேன். எப்படி சென்றேன், எந்த காரில் சென்றேன் என்றெல்லாம் பார்க்காதீர்கள். சந்திப்பு பற்றி மட்டும் பேசுங்கள். யூகத்தின் அடிப்படையில் எதுவும் பேச வேண்டாம்.

மிரட்டினால் தி.மு.க. பயந்து விடும்

கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைவது. காங்கிரஸ் எமர்ஜென்சியை கொண்டு வந்தது. மிசாவில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டார்கள். அப்போது காங்கிரசை தி.மு.க. கடுமையாக விமர்சனம் செய்தது.

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பற்றி அறிவாலயத்தில் பேச்சு நடக்கிறது. அதேநேரத்தில் அறிவாலயத்தில் ரெய்டும் நடக்கிறது. அப்போது தி.மு.க.வை மிரட்டி காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் போட்டது. நாங்கள் அப்படி அல்ல.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest