மத்திய அரசின் நிதியை தாமதமின்றி வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல் - South Indian Crime Point
Thursday, October 16, 2025
- Investigation Weekly Tamil Magazine

மத்திய அரசின் நிதியை தாமதமின்றி வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

Spread the love

பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2025, புரட்டாசி 4, விசுவாவசு வருடம் 05-30:AM

சென்னை,

சென்னையில் மாநில வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழுவின் 5வது ஆய்வுக்கூட்டம்

அனைத்துத் திட்டங்களும் கடைக்கோடி மக்களை சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

”மத்திய அரசு தன் நிதியை தாமதமின்றி சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்” என நேற்று (19–ந் தேதி) நடந்த ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) மாநில அளவிலான ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தலைமையுரையில் கூறியதாவது:–

“DISHA” கமிட்டிக் கூட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து முறையாக நடத்தி வருகிறது. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இது ஐந்தாவது கூட்டம். ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் கண்காணித்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறையோடு நமது அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டத்தில், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா–தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

2025–-2026–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 03.-09.-2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்துகொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டைகள் விரைவில் அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் முழுவீச்சில் வழங்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-–22-ம் ஆண்டு முதல் 2025-–26 வரை ரூபாய் 1,274 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 12,045 பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2,290 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதால் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை ஒன்றிய அரசு 10 கோடி ரூபாயாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும்.

பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் – ‘ஒரு துளி நீரில் அதிகப் பயிர்’ என்ற திட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நுண்நீர் பாசன அமைப்புகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.

தமிழ்நாடு முதன்மை மாநிலம்…

ஆனாலும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட நமது திராவிட மாடல் அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து 100 விழுக்காடு மானியத்தை சிறு, குறு விவசாயிகளுக்கும், 75 விழுக்காடு மானியத்தை இதர விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. 12 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஊக்கத்தால் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பயிர்கள் சாகுபடி பரப்பளவு அதிகப்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக 2022–-23ஆம் ஆண்டு 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்ட அளவினை உயர்த்தும் வகையில் 473 கிராமங்களில் 52,197 ஹெக்டரில் நுண்நீர்ப் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தானியங்கி நுண்நீர்ப் பாசன அமைப்புகள் அமைத்திட ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 40 ஆயிரம் வீதம் சிறு, குறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியமாக ஹெக்டருக்கு ரூபாய் 22 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டருக்கும், இதர விவசாயிகளுக்கு 45 விழுக்காடு மானியமாக ஹெக்டருக்கு ரூபாய் 18,000 வீதம் அதிகபட்சமாக 5 ஹெக்டருக்கும் வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 560 ஹெக்டர் நிலப்பரப்பில் 1 இலட்சத்து 57 ஆயிரத்து 279 விவசாயிகள் ரூபாய் 1,312 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதிப்பயன்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் திட்டப் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு

“ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே” நமது முக்கிய நோக்கமாகும். குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும்

54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 இலட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 5.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்தை வலியுறுத்தல்

“ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15-11-2024 அன்று துவங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய

0–6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

துறைவாரியான திட்டங்கள்

பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை-உழவர் நலத் துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடர்பான கருத்துகளை விளக்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆ. பாலு, தொல். திருமாவளவன், கே. சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், துரை வைகோ, திரு. நவாஸ்கனி ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், வி.ஜி. ராஜேந்திரன், நீலமேகம் ஆகியோரும், தன்னார்வலர்கள் தீபிகா மற்றும் கருணாகரன் ஆகியோரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மேலும், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இறுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நன்றியுரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தொல்.திருமாவளவன், கே. சுப்பராயன், சு. வெங்கடேசன், பி. மாணிக்கம் தாகூர், கே.நவாஸ் கனி, துரை வைகோ

மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், நா.எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா மற்றும் கருணாகரன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தலைமை தபால் அலுவலர், அலுவல்சாரா உறுப்பினர்கள் பி.ஜனகரத்தினம், டி. தீபிகா, பேட்ரிக் ராஜ்குமார் அந்தோணிசாமி மற்றும் அரசு சார்பற்ற அமைப்பு சார்பாக முனைவர் எஸ்.வி.முருகன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest