
பதிவு: ஞாயிறுக்கிழமை, செப்டம்பர் 21, 2025, புரட்டாசி 5, விசுவாவசு வருடம் 04-20:AM
நாகப்பட்டினம்,
த.வெ.க. தலைவர் விஜய் 2ம் கட்டமாக இன்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்தார். திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை விஜய் மேற்கொண்டார். இதற்காக விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:25 மணிக்கு வந்தடைந்தார். இன்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.ஆனால் இன்று முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நுழைவு வாயில் பகுதியிலேயே தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.விமான நிலைய பணியாளர்கள், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
உற்சாக வரவேற்பு
பின்னர் விஜய் கார் மூலம் புதுக்கோட்டை ரோடு மாத்தூர், சூரியூர் ரிங் ரோடு, துவாக்குடி டோல் கேட் வழியாக தஞ்சாவூர் பைபாஸில் நாகை வந்தடைந்தார். வாஞ்சி ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் வழியாக கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அவரது பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. தொண்டர்கள் மேள தாளத்துடன் மலர்கள் தூவி விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். காவல்துறையினர் அனுமதித்த நேரத்தை கடந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். விஜய் தனது பிரச்சார வாகனத்தின் மீது ஏறி வந்தவுடன் தொண்டர்கள் விஜய் வாழ்க… வாழ்க என்று உற்சாச குரல் எழுப்பினர்.

விஜய் பிரச்சாரம்
அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்து பல்லாயிரகணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசத் தொடங்கினார். எல்லோரையும் சாப்பிட்டீங்களா? என்று கேட்ட விஜய், அண்ணாவுக்கு வணக்கம், பெரியாருக்கு வணக்கம் என்று தனது பேச்சை தொடங்கினார்.
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இது பற்றி மதுரை மாநாட்டில் பேசினேன். இது தப்பா? இது நமது உரிமை கடமை.
இதே நாகையில் 14 வருடத்துக்கு முன்பு 2011–ம் ஆண்டு பிப்ரவரி 22–ந் தேதி மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினோம். இந்த விஜய் களத்திற்கு வருவது புதிது அல்ல, கண்ணா.
முன்பு விஜய் மக்கள் இயக்கமாக இருந்தது. அது இன்று த.வெ.க.மாக உள்ளது. அன்றும் இன்றும் சரி, மக்களோடு மக்களாக நாம் இருக்கிறோம்.
ஸ்டாலின் கபட நாடகம்
மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கும் போது வெறும் கடிதத்தை மட்டும் எழுதி கபட நாடகம் ஆடுகிறது தி.மு.க. அரசு. இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்கள் என பிரிதது பார்க்கிறது பா.ஜ.க. என்று விஜய் கூறினார்.
ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடு பெற்று வந்ததாக கூறுகிறார். சி.எம். சார் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள், வெளிநாட்டு முதலீடா, வெளிநாட்டில் உங்கள் குடும்ப முதலீடா? என்று அவர் காட்டமாக கேட்டார்.
நான் பிரச்சாரம் செய்ய போலீசார் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். தடைகளை விதிக்கிறார்கள்.
அதை கேட்க கூடாது; இதை பேசக்கூடாது என்று தடை போடுகிறார்கள். என் மக்களை சந்திக்க தடை போடுகிறீர்களா? இனி மக்களிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாகையில் பிரசாரத்தை முடித்து விட்டு சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் வரும் விஜய். திருவாரூர் தெற்கு வீதியில் பிரசாரம் செய்கிறார். மதியம் 3 மணி முதல் 5 மணி வரை அவர் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். திருவாரூரில் பிரசாரம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு விஜய் சென்னை செல்கிறார்.