15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தரவேண்டும்தொகுதியில் 4 நாட்கள் இருந்து மக்கள் குறைகளை கேட்கவேண்டும்தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் கட்டளை - South Indian Crime Point
Wednesday, October 15, 2025
- Investigation Weekly Tamil Magazine

15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தரவேண்டும்தொகுதியில் 4 நாட்கள் இருந்து மக்கள் குறைகளை கேட்கவேண்டும்தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் கட்டளை

Spread the love

பதிவு: புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025, புரட்டாசி 8, விசுவாவசு வருடம் 04-30:AM

சென்னை,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் ஆற்றிய பணி குறித்து அறிக்கையை தனக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், போன்ற முகாம்களில் கலந்து கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிரை சேர்த்திடும் வகையில் மேற்காணும் முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கடுமையாக உழைக்க வேண்டும்

2024–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டார்கள். அதேபோல், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து கழகப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

களமிறங்கும் எம்.பி.,க்கள்

‘ஒவ்வொரு எம்.பி.,க்கும், மூன்று அல்லது நான்கு சட்டசபை தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒதுக்கப்படும். அவற்றில், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் போன்ற பணிகளை முழுவீச்சில் செய்து முடிக்க வேண்டும். தேர்தலில் பொறுப்பேற்கும் எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் வெற்றியை தேடி தர வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest