ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை சுரண்டும் தமிழக அரசு – சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம் - South Indian Crime Point
Wednesday, October 15, 2025
- Investigation Weekly Tamil Magazine

ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை சுரண்டும் தமிழக அரசு – சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்

Spread the love

பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2025, புரட்டாசி 9, விசுவாவசு வருடம் 06-30:AM

புதுடில்லி,

‘இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது; நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?’ என, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் நர்ஸ்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நிரந்தரமாக நியமிக்கப்படும் நர்ஸ்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் குறைவான சம்பளத்தில் இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கு தீர்வை வழங்கக்கோரி நர்ஸ்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சம வேலைக்கு; சம ஊதியம் என்ற அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு நிரந்தர நர்ஸ்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.

‘இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை’ எனக் கூறி, அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத். சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, 2,000 நாட்களுக்கு மேல் ஆகிறது. அதை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளீர்கள்?’ என, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நர்ஸ்கள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் சார்ந்து இருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ், 440 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தமிழக அரசுக்கு வழங்காமல் இருக்கிறது. அந்த நிதி கிடைத்தால் தான் எங்களால் நர்ஸ்களுக்கு முழு ஊதியங்களை வழங்க முடியும்’ என்றார்.

இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள் கூறியதாவது:

உங்களுக்கு தேவைப்படுகிறது என்றால் நீங்களாகவே தனியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்த வேண்டியது தானே. உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்குவது உங்கள் கடமை. அதை நீங்கள் எந்த சூழலிலும் தட்டிக் கழிக்க முடியாது.

குறிப்பாக, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக நர்ஸ்களை நிரந்தர பணி நியமனம் செய்யாமல் உள்ளீர்கள். இலவசங்களை கொடுக்க மட்டும் உங்களுக்கு பணம் இருக்கிறது; ஆனால் நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?

தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பதை எங்களிடம் கூறுங்கள். தமிழக அரசு அனைத்திலும் வளர்ந்த மாநிலம், பொருளாதார ரீதியிலும் செல்வாக்கு மிக்க மாநிலமாகத்தான் இருக்கிறது என சொல்கிறீர்கள். ஆனால் சேவை செய்யும் நர்ஸ்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். இதை கண்டிப்பாகஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிறகு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’ என்றார். இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்’ என, நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest