
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 2025, புரட்டாசி 12, விசுவாவசு வருடம் 05-30:AM
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில்கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 39 பேர் உயிரிழந்தனர்.நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, த.வெ.க., தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், இரண்டு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில், மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று மதியம், 12:00 மணிக்கு ரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்த விஜய், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் வழியாக வேலுச்சாமிபுரத்திற்கு வர நீண்ட நேரமானது.
ஆனால், தொண்டர்கள் நேற்று காலை, 10:00 மணி முதலே, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் குவியத் தொடங்கினர். இதில், குழந்தைகள், பெண்கள் அதிகம் பேர் திரண்டனர். இதனால், மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, இரவு, 7:00 மணிக்கு பிரசார இடத்திற்கு, த.வெ.க., தலைவர் விஜய் வந்தடைந்தார். தொடர்ந்து மக்களிடையே பேச தொடங்கினார்.
அப்போது, அவர் பேசிய மைக் சரியாக வேலை செய்யவில்லை. மைக்கை சரி செய்வதற்காக, பிரசார வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தினர். அப்போது திரண்டிருந்த மக்கள் நகர இடமின்றி, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால், நெரிசல் ஏற்பட்டது. உடனே பேச்சை நிறுத்திய விஜய், மயங்கி விழுந்தவருக்கு தண்ணீர் கொடுக்கும்படி மைக்கிலேயே கூறினார். மேலும், பிரசார வாகனத்தில் இருந்தபடியே, மயங்கி விழுந்தவரின் பகுதியில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவினர்.
அப்போது, ஆம்புலன்சை வரவழைத்த விஜய், மயங்கியவரை மீட்டு அழைத்து செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் பேச தொடங்கினார். இருந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தொடர்ந்து மயங்கி விழ துவங்கினர்.
மேலும், அங்கிருந்த சாலையோர பள்ளத்திலும் சிலர் விழுந்தனர். அதனால், நிலைமைமோசமானதால், 7:15 மணிக்கு விஜய் பேசுவதை முடித்துக் கொண்டு புறப்பட தயாரானார்.அவரை பார்ப்பதற்காக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர்முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில், குழந்தைகள் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தனர்.
தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கி கிடந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகளை அழைத்து சென்ற பெற்றோர் கதறி அழுததால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனையே போர்க்களம் போல காணப்பட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் கூக்குரல், அழுகை என சோகத்தில் மூழ்கியது. இரவு, 9:00 மணி நிலவரப்படி, குழந்தைகள் உள்பட, 35க்கும் மேற்பட்டோர் பலியானதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தண்ணீர் பாட்டில் வீசியது சரியா?
கரூர் கூட்டத்தில் விஜய் பேச துவங்கியதும், அவர் பிரசார வாகனத்திற்கு அருகே நின்ற கூட்டத்தினர் மத்தியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், சிலர் மயக்கமடைந்தனர். உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்குமாறு கூறி, விஜய் தன் பிரசார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வழங்கினார்.
அடுத்தடுத்து தண்ணீர் வேண்டும் என, கூட்டத்தில் இருந்து குரல் எழ, விஜயுடன் நின்ற ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜயின் பாதுகாவலர்கள் தண்ணீர் பாட்டில்களை ஒவ்வொன்றாக கூட்டத்தினரை நோக்கி வீசினர். மின்தடை செய்யப்பட்டு கும்மிருட்டாக இருந்த நிலையில், இவர்கள் வீசிய தண்ணீர் பாட்டிலை பிடிக்கவும், கீழே விழுந்த பாட்டிலை எடுக்கவும் கூட்டத்தினர் முண்டியடித்ததில், பலர் கீழே விழுந்தனர்.இதில், ஒருவரை ஒருவர் மிதித்ததே இவ்வளவு உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.
மின்தடையும் ஒரு காரணம்?
கரூர் கூட்டத்திற்கு விஜய் வருவதற்கு முன்னரே, வேலுச்சாமிபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததும், மரம், கட்டடம் போன்றவற்றின் மீது இளைஞர்கள் பலர் ஏறியதும், அப்பகுதியில் மின் ஒயர்கள் அருகருகே சென்றதால், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதாலும், மின்தடை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், விஜய் பேச துவங்கிய பிறகு கூட்ட நெரிசல் அதிகரித்து, தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது, அந்த பகுதியே கும்மிருட்டாக இருந்ததால், யார், எங்கு நிற்கின்றனர் என்பது தெரியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும், இருட்டாக இருந்ததால், கீழே விழுந்த பலரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
50 ஆயிரம் பேர் கூடினர்
விஜய் பேசிய வேலுச்சாமிபுரம் பகுதியில், 15 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள், குழந்தைகள், உடல்நல பிரச்னை உள்ளவர்களால், நெரிசலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கூட்டம் அதிகமானதால், ஏராளமானோர் அருகில் உள்ள கட்டடங்கள், மரங்கள் மீது ஏறினர். அதிகமானோர் மரங்களின் மீது ஏறியதால், அதன் கிளைகள் முறிந்து விழுந்தன. கூட்ட நெரிசலில் யார் எங்கிருக்கின்றனர் என்பதை அறிய முடியவில்லை. பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை காணாமல் கதறி அழுததையும் காண முடிந்தது. அரசியல் கூட்டத்தில் நடந்த, மிகப்பெரிய அசம்பாவிதம், தமிழகம் முழுதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வந்தடைந்த விஜய்
கரூர் பிரசார கூட்டத்தில், கடும் நெரிசலில் மக்கள் சிக்கியதால், த.வெ.க., தலைவர் விஜய் தன் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார். காரில் திருச்சி விமான நிலையம் வந்த அவரை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து, பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவே அவர் சென்னை வந்தடைந்தார்.