2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு – நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு - South Indian Crime Point
Wednesday, October 15, 2025
- Investigation Weekly Tamil Magazine

2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு – நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு

Spread the love

பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 04, 2025, புரட்டாசி 18, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.

இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன.

அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலுக்கான களப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

அதன்படி தேர்தலுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பாகவே தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து, கட்சி உட்கட்டமைப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் (ஐபிஎல்) இரா.ஐயனார் கூறுகையில், “நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலுக்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதுவரை தேர்தலையொட்டி 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படும். அந்தவகையில் 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் தலா 117 பெண்கள், 117 ஆண்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

குறிப்பாக இந்தமுறை அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண்களுக்கே வாய்ப்பளிக்கப்பட உள்ளது. அதேபோல் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் முன்னெடுக்காத வகையில் முதல்முறையாக 5 இடங்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளோம். இதற்கு முன்பு தமிழக அரசியல் வரலாற்றில் கும்பகோணம் அல்லது மயிலாப்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டுமே பிராமணர்களுக்கு இதர கட்சிகளில் வாய்ப்பளிக்கப்படும்.

ஆனால் 2026 தேர்தலில் முதல்முறையாக பிராமணர்களுக்கு அதிகப்படியான இடங்களை நாம் தமிழர் கட்சி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த 5 பேரில் நான்கு பேர் பெண்களாவர்.

இந்த வேட்பாளர்கள் சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இவர்கள் உட்பட சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நிறைவடைந் துள்ளதும் குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest