கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன் ? – உச்ச நீதிமன்றத்தில் வாதம் - South Indian Crime Point
Wednesday, October 15, 2025
- Investigation Weekly Tamil Magazine

கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன் ? – உச்ச நீதிமன்றத்தில் வாதம்

Spread the love

பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 11, 2025, புரட்டாசி 25, விசுவாவசு வருடம் 06-30: AM

புதுடில்லி,

‘கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தியதால் தான் விஜய் புறப்பட்டு சென்றார்’ என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சார்யா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணை குழு

குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என, த.வெ.க., தாக்கல் செய்த மனு, சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அது தவிர, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் தாக்கல் செய்த மனு, உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு, பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த மனு ஆகியவையும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம்:

கரூர் பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை அனைத்தையும் கட்சியின் தலைவர் மற்றும் பிற நிர்வாகிகள் முறையாக பின்பற்றினர். ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரராக இல்லாத விஜய் பற்றி, உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துஉள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது. அப்படி இருக்கையில், சென்னையில் இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றே விசாரணை வரம்புக்குள் வராத வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால், அவ்வாறு எந்த அனுமதியும் பெற்றதாக தகவல் இல்லை.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் நடந்த உடன், த.வெ.க., தலைவர் விஜய் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது. போலீஸ் பாதுகாப்புடன் தான் விஜய், அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க, உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தியதால் தான், கரூரில் இருந்து விஜய் புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்த த.வெ.க., நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. விஜயை எதிர்மனுதாரராக சேர்க்காமல் அவதுாறு கருத்துக்களை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உண்மை நிலையை வெளிக்கொண்டு வர கண்டிப்பாக விசாரணை தேவை. அந்த விசாரணை, உச்ச நீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணை குழு மூலம் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதை தொடர்ந்து, உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில், தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. உயர் நீதிமன்றமும் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது; இரண்டின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்’ என, வாதிட்டார்.

இதன் பின், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முன் வைத்த வாதம்:இந்த விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமிக்கவில்லை. உயர் நீதிமன்றம் தான் நியமித்துள்ளது. கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழக அதிகாரிகள். எனவே, ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர வேண்டும். அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

வழக்கு ஒத்தி வைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று பார்த்தாரா, இல்லையா என்பது எதற்குமே தொடர்பில்லாத விஷயம். உயர் நீதிமன்றத்தின் விசாரணை முறையில் இரண்டு விபரங்கள் தெளிவாகின்றன.

உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை விசாரித்த அதே சமயம், சென்னை உயர் நீதிமன்றமும் மற்றொரு வழக்கை விசாரித்துள்ளது. மதுரை, சென்னை நீதிமன்றங்கள் ஒரே நாளில் வேறு வேறு உத்தரவுகளை எப்படி பிறப்பித்தன? சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி?

வழிகாட்டுதல்கள் கோரி மதுரையிலும், சென்னையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் டிவிஷன் பெஞ்சும், சென்னையில் தனி நீதிபதியும் விசாரித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன?வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை வைத்ததால், அதற்கு அனுமதி அளிக்கிறோம். அனைத்து மனுக்கள், பிரமாண பத்திரங்களை பார்த்த பின் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest