சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை – டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Spread the love

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 07.30 AM சித்திரை 10, விசுவாவசு வருடம்

சென்னை,

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் பேச தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து சட்டசபையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக சட்டசபையில் டாஸ்மாக் நிர்வாகம் மீதான முறைகேடு புகார் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அப்போது சபாநாயகர் அப்பாவு, “அதிமுக உறுப்பினர்கள் 2 பேர் விவாதத்தில் பேச உள்ளபோது எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. மானியக் கோரிக்கை மீது பங்கேற்க உள்ள அதிமுக உறுப்பினர்கள் முதலில் பேசட்டும். நினைத்த நேரத்தில் பேச அனுமதிக்க முடியாது. விதிகளிலும், மரபுகளிலும் இல்லாதவற்றை பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

பயமில்லை

மேலும் பயமா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியதற்கு, யாரும் பயந்தவர்கள் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு மற்றவர்களை விட அதிக நேரம் பேச உரிமை உண்டு. ஆனால் திடீரென பேச முடியாது என்று அவை முன்னவர் துரை முருகன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதற்காகத் தான். ஆனால் அன்மைகாலமாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், பிரதான எதிர்கட்சிகள் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் மானிய கோரிக்கையில் ஒரு பிரச்சனை குறித்து பேச நான் எழுந்தேன். அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பதிலை எதிர்பார்த்து அந்த கருத்தை சொல்ல முயன்ற போது சபாநாயகர் வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டார். அதிலும் இதற்காக நான் அனுமதி கொடுக்கவே முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். எதிர்கட்சித் தலைவருக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு முழு உரிமை உண்டு. இது சட்டமன்றத்தின் மரபு. அந்த அடிபடையில் மக்கள் பிரச்சினை பற்றி பேச நான் அனுமதி கேட்டேன். அதற்கு மறுத்துவிட்டனர்.

ரூ. 1000 கோடி முறைகேடு

ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்களில் சோதனை செய்தனர். அதோடு டாஸ்மாக் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் மதுபான ஆலையிலும் சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை சோதனை செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செய்தி வந்துள்ளது. இது குறித்து முதலமைச்சரோ? சம்பந்தப்பட்ட அமைச்சரோ எந்தவித பதில் அறிக்கையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டுவர வாய்ப்பு கேட்டேன்.

இன்றைக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடத்திருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அது குறித்து இந்த அரசு முழுமையான விளக்கம் அளிக்கவில்லை. இன்ற ஆயத்தீர்வை மானிய கோரிக்கை வருகிறது. அதன் அடிப்படையில் தான் பிரச்சனையை நான் சட்டமன்றத்தில் கொண்டு வந்தேன். அது பற்றி பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன் இது குறித்து கண்டிப்பாக உறுதியாக நான் பேசுவதற்கு அனுமதி கொடுக்கமாட்டேன் என்று சாபாநயகர் கூறிவிட்டார்.

நிரூபணம்

அப்படி என்றால் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், பிற அலுவலகங்களிலம் அமலாக்கத்துறை செய்த சோதனையில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடத்திருப்பது நிரூபணமாகிறது. அதற்குரிய பதிலை இவர்கள் தெரிவித்திருந்தால் மக்களுக்கு தெரிந்திருக்கும். அதைத் தான் நான் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்றத்திலிருந்து டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடப்பதாக பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் இந்த அரசு மதுபான கடை மூலம் ஊழல் செய்து பல்வேறு தரப்புக்கு இந்த பணம் போகிறது. ஒரு நாளைக்கு ரூ. 15 கோடி என்றால் 30 நாட்களுக்கு ரூ. 450 கோடியாகிறது. 12 மாதத்திற்கு 5400 கோடி ரூபாய் மதுபான விற்பனை மூலம் இந்த ஆட்சியில் ஊழல் நடத்திருப்பதாக தெரியவருகிறது. பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஒரு தகவலை தெரிவித்துள்ளனர். இது உண்மை தான். இந்த பணத்தை நாங்கள் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. பல அதிகாரிகளுக்கு கொடுத்தோம். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கொடுத்தோம் என்று செய்திகள் வந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். இதையெல்லாம் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஜனநாயக படுகொலை

மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு தான் சட்டமன்றம். மக்கள் பிரச்சினை, நாட்டில் நடக்கிற ஊழல் குறித்து முறையாக சட்டமன்றத்தில் கூறுவது எங்கள் கடமை. ஆனால் சட்டப்பேரவைத் தலைவர் இன்று நடந்து கொண்டது ஜனநாயக படுகொலையாக நாங்கள் பார்க்கிறோம். ஏனென்றால் இன்று இந்த துறையின் மானிய கோரிக்கை மீது பேச எங்கள் உறுப்பினருக்கு 10 நிமிடம் மட்டும் கொடுத்தனர். அதில் எப்படி ஒரு துறை பற்றி பேச முடியும். கோடை காலம் வந்துவிட்டது. பல இடங்களில் மின் வெட்டு வந்துவிட்டது. இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க என்ன ஆலோசனை கொடுக்க முடியுமோ அதை கொடுக்கத்தான் எங்களது உறுப்பினர் பேசினார். இடையில் மறிக்கப்பட்டது. மைக் செயல்படவில்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்டதாக நாங்கள் பார்க்கிறோம்.

இன்று நேரமில்லா நேரத்தில் பேச நினைத்தேன். ஆனால் இன்று மானிய கோரிக்கை என்பதால் அதில் பேசலாம் என்று விட்டுவிட்டேன். சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த மானிய கோரிக்கை பற்றி எங்களுக்கு உறுப்பினருக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதால் அதுபற்றி பேச முடியவில்லை. அதனால் நான் பேச முயன்றேன். அதற்கு அனுமதி கேட்டேன். அதுவும் நான் சொல்லும் கருத்து சரியாக இருந்தால் பதிவு செய்யுங்கள். தவறாக இருந்தால் நீக்கிவிடுங்கள் என்று சொன்னேன். அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அண்ணா தி.மு.க. ஆட்சி ஜனநாயக முறைப்படி நடந்த ஆட்சி. ஜனநாயக முறைப்படி நாங்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு கொடுத்தோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், என்னுடைய ஆட்சிக் காலத்திலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அதிக வாய்ப்பு கொடுத்தோம். அப்படி வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்கள் பேசும் கருத்தின் அடிப்படையில் அந்த பிரச்சனையை தீர்க்க வழிகிடைக்கும் என்று வாய்ப்பு கொடுத்தோம். அது ஆரோக்கியமாக இருந்தது. ஆரோக்யமான அரசு செயல்பட்டது. ஆனால் இன்று அமலாக்கத்துறையை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்ல முடியாத நிலை. அதனால் தான் சட்டப்பேரவை தலைவர் என்றைக்கும் இல்லாதபடி நீங்கள் எவ்வளவு பேச நினைத்தாலும் இன்று அனுமதிக்க முடியாது என்று சொல்கிற அளவுக்கு இந்த அரசின் பின்னணி தெரிகிறது. இது திட்டமிட்ட செயல்.

இப்போதே மின்தடை ஏற்பட்டு விட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு தூக்கமில்லாத நிலை ஏற்படுகிறது. இப்போது விவசாயத்திற்கு பகலில் 6 மணி நேரம் இரவில் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது. எப்படி விவசாயம் செய்ய முடியும். எங்களது ஆட்சிகாலத்தில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். இந்த அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. விவசாயத்தை புறக்கணித்துள்ளனர். குடிநீர் வழங்கும் மின் மோட்டாருக்கு மின்தடை ஏற்படுவதால் குடிநீர் வினியோக தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த அரசு பதவி ஏற்ற பிறகு சுமார் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6% மின் கட்டணம் உயர்த்தி 3 ஆண்டுகளில் 18% உயர்ந்து மொத்தம் 70% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. பீக் அவரில் அதிக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்கு சென்று விட்டது.

மாதம் ஒரு முறை மின் கணக்கீடு என்ன ஆனது?

2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கணக்கிடு செய்யப்படும் என்று சொல்லியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் விடியா ஆட்சியில் மக்கள் பிரச்சனை பற்றி கவலையில்லை. 2021 தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக வெளியிடப்பட்ட அறிக்கை என்று தெரியவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest