இந்தியா – பாகிஸ்தான் போர் சூழல் – பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள் - South Indian Crime Point
Monday, December 01, 2025
- Investigation Weekly Tamil Magazine

இந்தியா – பாகிஸ்தான் போர் சூழல் – பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள்

Spread the love

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 09.00 AM சித்திரை 21, விசுவாவசு வருடம்

கராச்சி,

கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தமைக்காக, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து உள்ளது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களை நாட்டில் இருந்து வெளியேறவும் இந்திய வெளியுறவு செயலகம் உத்தரவிட்டது. இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது.

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானை தாக்கவும் இந்தியா தயாராகி வருகிறது என கூறப்படுகிறது. ஆனால் போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் அதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது கேள்வியாக உள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல், நம்ப முடியாத வேகத்தில் எங்கள் மீது இந்தியா குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என தெரிவித்த பாகிஸ்தான், எங்களுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ந்து கூறி வருகிறது. பஹல்காம் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு நாங்களும் கவலையை வெளியிட்டு இருக்கிறோம்.

நாங்களும் எங்கள் இரங்கலை தெரிவித்தோம் என ஒருபுறம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுகிறது.

இதுபோன்று இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவத்தில் கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. பாகிஸ்தானின் ஆயுத தொழிற்சாலையானது, ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை விநியோகித்து வருகிறது.

ஆனால், கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை. எம்.109 ஹவிட்ஜர்ஸ் ரக பீரங்கிகளுக்கு வேண்டிய எறிகுண்டுகளும், பி.எம்.-21 சாதனங்களுக்கு தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லாத சூழலில், இந்தியாவின் தாக்குதலை அந்நாட்டு ராணுவம் எதிர்கொள்வது என்பது திறனற்ற ஒன்றாகவே உள்ளது.

உலகளாவிய தேவையை முன்னிட்டு வெளி நாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து விட்டு உள்நாட்டுக்கு வேண்டிய ஆயுதங்கள் பற்றாக்குறையாக உள்ள நாடாக உள்ளது. இதன்படி, உக்ரைனுக்கு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விட்டு, பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள் உள்ளன என சமூக ஊடக தகவல்களும் தெரிவிக்கின்றன.

இதுபோன்று முக்கியத்துவம் வாய்ந்த வெடிபொருட்கள் பற்றாக்குறையால், பாகிஸ்தான் ராணுவம் ஒரு கட்டத்தில் அச்சமடைந்து உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றியும் மற்றும் வேறு சில விசயங்கள் பற்றியும் கடந்த 2-ந்தேதி நடந்த சிறப்பு படைகளின் தளபதிகளுக்கான மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு உள்ளன.

இதே விசயங்களை முன்னாள் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவும் இதற்கு முன்பே ஒப்பு கொண்டார். இந்தியாவுடன் நீண்டகால மோதலில் ஈடுபட போதிய ஆயுதங்கள் இல்லாமல் பற்றாக்குறையான சூழலிலும், பொருளாதார வலுவற்றும் பாகிஸ்தான் உள்ளது என அவர் குறிப்பிட்டார். இதனால், இந்தியா தாக்கினாலும் அதனை எதிர்க்க போதிய வெடிபொருட்கள், ஆயுதங்கள் வசதி இல்லாத நாடாகவே பாகிஸ்தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest