
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 03, 2025, ஆடி 18, விசுவாவசு வருடம், 08.40 AM
கோவில்பட்டி,
“குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் அமையும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நேற்று 2-வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். கோவில்பட்டியில் சிறப்பு பஸ்சில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-–
தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இயற்கையான கூட்டணி என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழகாக கூறினார். எங்களது கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதறுகிறார். பா.ஜ.க.வுடன் ஏன் கூட்டணி என்று கேட்டுகிறார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அவர் ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இந்த கேள்வியை கேட்கிறார்.
ஊழல் இல்லாத துறையே இல்லை
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் பயப்பட தேவையில்லை. ஆனால், அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி..மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை.
அண்ணா தி.மு.க.வை பா.ஜனதா கட்சி விழுங்கிவிடும் என்று மக்களை மடைமாற்றம் செய்கிறார்கள். நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தவுடன் தி.மு.க. கூட்டணி வீழ்ச்சி அடைந்துவிட்டது.
பா.ஜ.க. மதவாத கட்சி என்று அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் அந்த கட்சி மத்தியில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.
1999-ம் ஆண்டு தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றது. அப்போது முரசொலி மாறன் மத்திய மந்திரியாக இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் மந்திரியாக தொடர்ந்து பதவி கொடுத்து அழகு பார்த்தது பா.ஜ.க. ஆனால் 15 நாட்களில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு தாவியது. அங்கும் அவர் மந்திரி சபையில் இடம் பிடித்தார். பச்சோந்தி கூட எப்போதாவது தான் நிறம் மாறும். ஆனால் தி.மு.க. அடிக்கடி நிறம் மாறும் கட்சி. அப்போது எல்லாம் பா.ஜ.க. மதவாத கட்சியாக தெரியவில்லையா?. தங்களது குடும்பத்துக்கு பதவி கிடைத்தால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள். அதே நேரத்தில் அண்ணா தி.மு.க. கூட்டணி வைத்தால் மக்களை குழப்புகிறார்கள்.
போலீசுக்கு பாதுகாப்பு இல்லை
அ.தி.மு.க. மட்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. எங்களுக்கு உறுதுணையாக பா.ஜனதா உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். காவல்துறையினரே தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான ஆட்சி நடக்கிறது.
தி.மு.க. 16 ஆண்டுகளில் மத்திய அரசில் அங்கம் வகித்தது. அப்போது, ஏன் தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை கேட்டுப் பெறவில்லை. குடும்பத்துக்கு தேவையான நிதியை மட்டுமே பெற்று செயல்பட்டனர்.

இந்த குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு ஆட்சிக்கு, மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அந்த முடிவை வருகிற 2026 தேர்தலில் நீங்கள் செய்ய வேண்டும்.
மக்கள் வரிப்பணம் பாழ்
ஏழைகள் இருக்கும்போது துணை முதலமைச்சர் உதயநிதி சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்துகிறார். கருணாநிதிக்கு நினைவு மண்டபம் கட்டுவது தவறில்லை. ஆனால் கடலுக்குள் 2 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.82 கோடியில் எழுதாத பேனாவுக்கு சிலை வைப்பதா?. குடும்ப விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை செலவு செய்கிறார்கள். அந்த பேனா வைப்பதற்கு பதிலாக கருணாநிதி பிறந்த நாளில் எழுதும் பேனாவை மாணவர்களுக்கு வழங்குங்கள்.
உங்கள் சொந்த நிதியில் அறிவாலயத்தில் பேனா வைத்துக் கொள்ளுங்கள். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான். வேறு ஒன்றும் இல்லை.
உங்களுடன் ஸ்டாலின், சூப்பர் முதலமைச்சர் என்றெல்லாம் புதுப்புதுப்பெயர்களில் மக்களை தேடி வருகிறார்கள். இப்போதும் மக்கள் மீது அக்கறை வந்தது போல் நடிக்கிறார்கள். அதற்கும் கோர்ட் தடை விதித்து உள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. வெற்றிக்கூட்டணி. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.
முன்னதாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் முன் இருந்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறிது தூரம் ‘ரோடு ஷோ’ சென்றனர். அங்கு இருந்த பெண்கள் பூரண கும்பம், பால்குடம், முளைப்பாரி வைத்து வரவேற்றனர். அப்போது, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் சென்றனர். தொடர்ந்து அவர் ஓட்டப்பிடாரம் தேரடி திடல் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி
பின்னர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு இரவு 9 மணி அளவில் வந்தார். அவருக்குதெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு, எஸ்.பி.சண்முகநாதன் வெள்ளி வேல் நினைவு பரிசாக வழங்கினார்.
அண்ணாநகர் 3-வது தெருவில் திரண்டு இருந்த மக்களிடையே எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தூத்துக்குடி கடந்த 2023-ம் ஆண்டு கடும் வெள்ளத்தில் மிதந்தது. அப்போது முதல்-அமைச்சர் உங்களை பார்க்க வரவில்லை. டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளம் சூழ்ந்த மறுநாளே நான் இங்கு வந்தேன். பக்கிள் ஓடையில் அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த பணியை முடிக்கவில்லை. இதனால் வெள்ளம் வடியவில்லை. மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.
அப்போது, முதலமைச்சரோ, இங்கு உள்ள தி.மு.க. அமைச்சரோ மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மக்களை பற்றி கவலைப்படாமல், தன் வீட்டு மக்களை பற்றி மட்டும் முதலமைச்சர் கவலைப்படுகிறார்.
மாநகராட்சி பகுதியில் தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ.283 கோடியில் 4-வது பைப்லைன் திட்டம் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிய ஒரே அரசு அண்ணா தி.மு.க. அரசு. இது மீனவர்கள் நிறைந்த பகுதி, மீன்பிடி தடைக்காலத்தில் அதிக நிதி கொடுத்தது அண்ணா தி.மு.க. அந்த நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிரச்சாரத்தின்போது மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பி.ஏ.ஆறுமுக நயினார், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.