
பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2025, புரட்டாசி 11, விசுவாவசு வருடம் 05-30:AM
கரூர்,
கரூரில் விஜய் பிரசாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ள 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
த.வெ.க. சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பகுதிகள் மிகவும் குறுகலான பகுதி என்பதாலும், மக்கள் கூடும்போது நெரிசல் ஏற்படும் என்பதாலும் அந்த பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது என போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை த.வெ.க.வினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், கூட்டத்தை நடத்த போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். பிரசாரம் நடைபெறும் இடத்தில் சென்டர் மீடியன் பகுதிகளில் பதாகைகள் வைக்கக்கூடாது. தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக்கூடாது.
பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்.இ.டி. திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது என்பன உள்பட 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி கரூரில் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு விஜய் தொண்டர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதேபோல் நாமக்கல்லில் இன்று (சனிக்கிழமை) விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசாரத்திற்கு 20 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.