தமிழக அமைச்சரவை மாற்றமா? அல்லது தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றமா?

Spread the love

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.15 AM சித்திரை 14, விசுவாவசு வருடம்

சென்னை,

நீதிமன்ற கெடுபிடி காரணமாக, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பதவி விலக முன்வந்துள்ள இருவரும், தங்களின் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஊட்டி சென்ற கவர்னர் ரவி, இன்று சென்னை திரும்பியதும், அவருக்கு கடிதங்கள் அனுப்பப்படலாம் என, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சட்டசபையில் நேற்று, ‘பயோ’ மருத்துவ கழிவுகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என, நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டு இருந்தது. அவருக்குப் பதிலாக அந்த மசோதாவை, சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

இந்த மசோதா, வரும் 29ம் தேதி ஓட்டெடுப்புக்கு வரும் போது, செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க மாட்டார் என்பதால் தான், அவருக்குப் பதிலாக அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.

471 நாள் சிறைவாசம்

கடந்த, 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, 2023 ஜூன் 14ல் அவரை கைது செய்தது. உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, 471 நாட்கள் சென்னை புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, 2025 செப்டம்பர் 26ல் விடுதலையானார்.

அடுத்த சில நாட்களில், அவர் மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரானார். அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அமைச்சராக இல்லை என்பதால் தான், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

‘இரு நாட்களில் மீண்டும் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. எனவே, அவருக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?’ என, கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது. அமைச்சராக தொடர்ந்தால் ஜாமின் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், அமலாக்கத்துறையால் அவர் மீண்டும் கைது செய்யப்படுவார். இதை தவிர்க்க, முதல்வரிடம் செந்தில் பாலாஜி ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளதாக தெரிகிறது.

பொன்முடிக்கு நெருக்கடி

விலைமாதருக்கும், வாடிக்கையாளருக்கும் நடக்கும் உரையாடலை, சைவ, வைணவ சமயங்களின் புனித குறியீடுகளுடன் ஒப்பிட்டு, வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆபாசமாக, அசிங்கமாக பேசியது பெரும் சர்ச்சையானது.

பொன்முடியின் இழிவான பேச்சு தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும், தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தனி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், அ.தி.மு.க., – பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், மகளிர் அமைப்புகள், ஹிந்து அமைப்புகள், பொன்முடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனால், நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பொன்முடியும், முதல்வரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

துணை வேந்தர்கள் மாநாட்டுக்காக ஊட்டி சென்றுள்ள கவர்னர் ரவி, இன்று சென்னை திரும்பியதும், இரு அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்ப இருப்பதாக சொல்லப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் யார்?

செந்தில் பாலாஜி, பொன்முடிக்கு பதிலாக, அமைச்சரவையில் சேரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், தமிழரசி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், இளங்கோ உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.

இதில், பொன்முடிக்கு பதிலாக, சங்கராபுரம் உதயசூரியன் அல்லது விழுப்புரம் லட்சுமணன், செந்தில் பாலாஜிக்கு பதிலாக, அரவக்குறிச்சி இளங்கோவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை, மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest