காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் – 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!

Spread the love

பதிவு: வியாழக்கிழமை, மே, 15, 2025, 05.50 AM வைகாசி 01, விசுவாவசு வருடம்

புதுடில்லி,

கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார்.

கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ”மசோதாவை கவர்னர்கள் அனுப்பி வைத்தால், அதன் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என, கால நிர்ணயம் செய்தது.

மசோதா விஷயத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்தது, இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மே 15) உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பினார்.

  1. ஒரு சட்ட மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?
  2. அவ்வாறு மசோதா கவர்னர் இடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
  3. அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?
  4. அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வுக்கு செய்வதற்கு தடையாக உள்ளதா?
  5. அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
  6. அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா?
  7. அரசியல் சட்டத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
  8. ஒரு கவர்னர் தனக்கு வந்த மசோதாவை ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது, ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பான அரசியல் சட்ட விதிமுறைகள் குறித்து, ஜனாதிபதி 143வது சட்ட பிரிவின் படி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்க வேண்டுமா?
  9. அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரும், 201வது பிரிவின் படி ஜனாதிபதியும் எடுக்கும் முடிவுகள் சட்டம் ஆவதற்கு முன் ஏற்றுக்கொள்ளக் கூடியவையா? அந்த சட்டம் அமல் செய்வதற்கு முன்னதாகவே, நீதிமன்றங்கள் அவற்றின் பொருள் தொடர்பான விசாரணைகளை நடத்தலாமா?
  10. கவர்னர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவுகளை, அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின்படி வேறு வகையில் பிறப்பிக்க முடியுமா?
  11. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னர் ஒப்புதல் தராமலேயே அமலுக்கு கொண்டு வர முடியுமா?
  12. உச்சநீதிமன்றத்தின் ஒரு பெஞ்ச் தனக்கு முன் வந்துள்ள ஒரு வழக்கில், அரசியல் சட்டத்தின் 145 (3)ன் படி, அரசியல் சட்டம் தொடர்பான பல விதமான கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?
  13. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டவையா அல்லது அமலில் இருக்கும் அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?
  14. மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான விவகாரத்தில், அரசியல் சட்டத்தின் 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகார வரம்பை ஏதாவது வகையில், அரசியல் சட்டம் தடுக்கிறதா?

இவ்வாறு 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார்.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest