South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

INVESTIGATION/புலனாய்வு

இந்தியாவின் 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 09, 2025, 08.35 AM சித்திரை 26, விசுவாவசு வருடம்

புதுடில்லி,

‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டின் 15 நகரங்களை ஏவுகணைகளால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் எடுத்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம் தகர்க்கப்பட்டுள்ளது.

பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டு கொன்றனர். அந்த கொலைகாரர்களையும், அவர்களின் முகாம்களையும் அழிக்க, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், புதன் அதிகாலையில் இந்திய ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை குறி வைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கட்டடங்கள் தரைமட்டமாகின; 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தான் தாக்கும் என, நம் படைகள் தயார் நிலையில் இருந்தன. எதிர்பார்த்தது போலவே, நேற்று முன்தினம் நள்ளிரவில், 15 இந்திய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. அவை வழியிலேயே தடுத்து தகர்க்கப்பட்டன.

அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து, நம் படைகள் நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தின.

அதில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம் தகர்க்கப்பட்டது. நீண்ட நேரமாக விட்டு விட்டு கேட்ட குண்டு வெடிப்பு சத்தமும், இருட்டில் ஜொலித்த தீப்பிழம்பும் லாகூர் நகரில் பீதியை கிளப்பியது.

ஏறத்தாழ ஒன்றரை கோடி மக்கள் வாழும் இரண்டாவது பெரிய பாகிஸ்தானிய நகரம் அது. அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியமும் குண்டு வெடிப்பால் சேதமானது.

இதற்கிடையே, இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில், மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 16 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் படைகள், பீரங்கி தாக்குதல் நடத்தின.

முன்னதாக, பாகிஸ்தானின் முயற்சிகள் குறித்து, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. ‘அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்புர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய், புஜ் ஆகிய நமது நகரங்களை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.

அதை ஒருங்கிணைந்த, ‘யு.ஏ.எஸ்., கிரிட்’ எனப்படும் ஆளில்லாத வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பு வாயிலாக எதிர்கொண்டு நடுவானில் தடுத்து அழித்தோம்.

அந்த தாக்குதலுக்கு இணையாக, அதே பாணியில் நம் படைகளும், பாகிஸ்தானின் ராணுவ மையங்கள், வான்வழி பாதுகாப்பு கவச முறைகளை குறி வைத்து பதிலடி கொடுத்தன. இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு கவச கட்டமைப்பு தகர்க்கப்பட்டது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் பலி

எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இரவில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டனர். மற்ற இடங்களில் மூவர் இறந்தனர். பூஞ்ச் பகுதியில் உயிரிழந்தவர்களில், ஹரியானாவை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ராணுவ வீரரும் அடங்குவார்.

பாகிஸ்தான் சிப்பாய்கள் காயம்

பாகிஸ்தானின் லாகூரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில், நான்கு சிப்பாய்கள் காயம் அடைந்ததாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேலிடம் வாங்கி இந்தியா அனுப்பிய 25 ‘ஹார்பி’ ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது.

ஊடுருவி தாக்கும் இஸ்ரேல் ட்ரோன்

பாகிஸ்தான் நகரங்களை குறிவைத்து இந்தியா நேற்று ஏவிய ஹார்பி ரக ட்ரோன்கள் மிகவும் துல்லியமாக வேலையை முடிக்கும் ஆற்றல் கொண்டவை. ஆசியாவில் இது போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை. எதிரியின் ரேடார்களில் சிக்காமல், ஊடுருவி நுழைவது இதன் சிறப்பம்சம். இலக்கை தேடிப் பிடித்து, தேவைப்பட்டால் வானில் காத்திருந்து தகுந்த நேரத்தில் தாக்கி தகர்க்கக் கூடியது. பகல், இரவு எந்த நேரமாக இருந்தாலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, ஒன்பது மணி நேரம் வானில் வட்டமிட வல்லது.

சுதர்சன சக்கரம்!

பாகிஸ்தான் நமது நகரங்களை குறி வைத்து அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்களை தடுத்து அழிக்க, ரஷ்ய தயாரிப்பான எஸ் – 400 என்ற வான்வழி பாதுகாப்பு கவச முறையும் முதல் முறையாக நேற்று பயன்படுத்தப்பட்டது.சுதர்சன சக்கரம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்து புராணங்களில், பகவான் விஷ்ணு மற்றும் கிருஷ்ணர், சுதர்சன சக்கர ஆயுதத்தை வைத்திருப்பர். இது வேகமாகவும், துல்லியமாகவும், எதிரிகளை அழிக்கும் திறன் உடையது. அதுபோன்ற வசதிகள் உள்ளதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், 36 வகையான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அவற்றை தடுத்து அழிக்கும் திறன் இதற்கு உள்ளது. அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ரேடார் இதில் உள்ளது. தற்போது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த, அதிவீன நீண்ட தூர வான் பாதுகாப்பு முறையாக இது உள்ளது. இது, 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உள்ளது. மிக வேகமாகவும், மிக மெதுவாகவும் சென்று இலக்கை கண்டுபிடித்து துவம்சம் செய்துவிடும். இந்த பாதுகாப்பு முறை தற்போது முதல் முறையாக நம் படைகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து ஸ்குவாட்ரன்கள் வாங்க திட்டமிட்டு, மூன்று வந்துள்ளன. மற்றவை அடுத்தாண்டு வரும். ஒரு ஸ்குவாட்ரன் என்பது, 16 ட்ரோன்கள் அடங்கியது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest